Breaking News

சுதந்திரக் கட்சி தலைமையை கைப்பற்ற மகிந்த இரகசியத் திட்டம்

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியைக் கைப்பற்றும் இரகசிய முயற்சி ஒன்றில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியின் யாப்பில் திருத்தங்களை செய்து, அதன் தலைமைப் பதவியைக் கைப்பற்றும் முயற்சியிலேயே மகிந்த ராஜபக்ச ஈடுபட்டுள்ளார். இதற்காக, கட்சியின் மத்திய செயற்குழுவின் ஆதரவைப் பெறுவதற்காக, சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களை அவர் சந்தித்துப் பேச்சு நடத்தி வருகிறார்.

மகிந்த ராஜபக்சவின் இந்த முயற்சிக்கு, பெரும்பாலான சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக, கூட்டு எதிரணியின் அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான, பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

புதிதாக உருவாக்கப்படும் கட்சிக்கு மகிந்த தலைமையேற்க வேண்டும் என்று, சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், சுதந்திரக் கட்சியை விட்டு தாம் வெளியேறி புதிய கட்சியில் சேருவது முட்டாள்தனமானது என்றும், அதற்குப் பதிலாக சுதந்திரக் கட்சியின் தலைமையை மீளவும் கைப்பற்ற வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.