வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு விரைவில் விசேட நிதியம் - பிரதமர் அறிவிப்பு
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு விசேட நிதியமொன்றை இவ்வருடத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மேலும் சர்வதேச வங்கிகள் மற்றும் நாணய பரிமாற்றல்களின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைக்க உள்ளோம். இந்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கு கொழும்பு துறைமுக நகரத்தை பயன்ப டுத்தவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மனித உரிமையையும் தேசிய நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் புதிய அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்படும். இதன்போது நாட்டு மக்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என் றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
தேசிய இளைஞர் சம்மேளன பிரதிநிதி களை நேற்றுஅலரி மாளிகையில் சந்தித்து கலந்துரை யாடுகை யிலேயே பிரதமர் மேற்கண்ட வாறு கூறினார்.அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது.
இதன்படி வருட பூர்த்தியின் 52 ஆவது வாரத்தில் அரசியல் ரீதியாக புதிய பயணத்தை ஆரம்பிப்பதற்கான அத்திவாரம் இடப்பட்டுள்ளது. மேற்படி புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காக முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு பேரவையாக மாற்றும் பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. 21 நுற்றாண்டின் வளர்ச்சிக்கு ஏற்ப புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும்.
இந்நிலையில் மக்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளித்து உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பினை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றியதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்துவோம். இதன்போது நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கு கொண்டு முழு நாட்டு மக்களும் புதிய அரசியலமைப்பிற்கு பூரண ஆதரவினை வழங்க வேண்டும்.
நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்தமையின் விளைவாக 2016 ஆம் ஆண்டின் போது இலங்கை அரசியல் ரீதியாக ஸ்திரமடைந்து காணப்படும் என்றும் சர்வதேச பொருளாதாரம் சீர்குலையும் சந்தர்ப்பத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் சிறப்பான மட்டத்தை காண்பிக்கும் என்றும் சர்வதேச பிரநிதிகள் நம்பிக்கை வெளியிட்ட வண்ணமுள்ளனர்.
கடந்த வருடத்தின் போது அரசியல் ரீதியான விடயங்களுக்கே நாம் முக்கியத்துவம் கொடுத்தோம். இருந்தபோதிலும் இந்த வருடத்தின் போது தொழில் பிரச்சினைகள் மற்றும் பொருளாதார விடய தானங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவுள்ளோம். இதன்படி பாடசாலை கல்வி ,தொழில் பயிற்சி, தொழில் வாய்ப்பு ,தகுந்த சம்பளம் ,வீட்டு வசதிகள், சுகாதாரம் ,ஓய்வூதியம் மற்றும் வளமான வாழ்க்கை என்ற சாதாரண மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த வருடத்தின் போது தீர்வு காணப்படும். இதனை நோக்காகக் கொண்டு அதிகளவிலான முதலீட்டாளர்களை இலங்கைக்கு அழைத்து வரவுள்ளோம். கிராம இராஜ்ஜிய திட்டத்தின் ஊடாக முழு கிராமிய பொருளதாரமும் நிர்வகிக்கப்படும். இதற்காக விசேட சபையொன்றும் நிறுவப்படும். மேலும் சுற்றுலா துறையை பாரியளவில் மேம்படுத்தவுள்ளோம்.
நாட்டின் அபிவிருத்தியையும் பொருளாதாரத்தையும் நோக்காகக் கொண்டு தொழில் நுட்பம் சுற்றுலா விவசாயம் என்பவற்றுக்கு விசேட வலயங்கள் உருவாக்கப்படும்.
இதேவேளை சர்வதேச நாணயத் துறையிலும் வங்கி கட்டுப்பாட்டு துறையிலும் இலங்கையை உலகின் கேந்திர நிலையமா மாற்றுவதற்கு எத்தனித்துள்ளோம். இந்த திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு துறைமுக அபிவிருத்தி நகரத்தை பிரயோகிக்க உள்ளோம். இதற்காக சட்டரீதியாக திருத்தங்கள் முன்னெடுக்கப்படும். பொருளாதார நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்பிலான சட்டத்திட்டங்களில் பல்வேறு குறைப்பாடுகள் நிலவுகின்றன. இவையணைத்தும் நிவர்த்தி செய்யப்படும்.
அதேபோன்று முப்பது வருடகால யுத்தத்தின் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன. இதன்காரணமாக அப்பகுதி இளைஞர்கள் யுவதிகள் தொழிலின்றி வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர். யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்குரிய காணிகளை விடுவித்து மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த வேண்டியுள்ளது. ஆகவே இதனை அடிப்படையாக கொண்டு ஜப்பானின் உதவியுடன் விசேட பொருளாதார அபிவிருத்தி மாநாட்டை வடக்கு கிழக்கில் நடத்தவுள்ளோம். இதனூடாக வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்காக விசேட நிதியமொன்று உருவாக்கப்படும்.
அத்துடன் உலகில் அனைத்து நாடுகளிலும் மொத்த தேசிய உற்பத்தியில் 80 சதவீதம் மாநகரங்களிலேயே முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே எதிர்காலத்தில் இந்து சமுத்திரத்தின் பாரிய மாநகரமாக உருவாக்கும் நோக்குடனேயே மேல் மாகாணத்தை பாரிய மாநகரமாக உருவாக்கவுள்ளோம். இதற்கு சுமார் 20 வருடங்கள் தேவைப்படுகின்றன. மேலும் இத்தகைய திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னர் அபிவிருத்தி துறையிற்க ஏற்ற சட்டத்திட்டங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற வேண்டியுள்ளது.
ஆகவே 2016 ஆம் ஆண்டு இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடமாகும். இந்த வருடத்தில் யுக மாற்றமொன்றை ஏற்படுத்துவோம். தேசிய அரசாங்கத்தின் மாற்றமிகு வேலைத்திட்டத்திற்கு நாட்டு மக்கள் அனைவரும் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என்றார்.








