பேரவை கலைக்கப்பட்டவில்லை - ஏற்பாட்டுக்குழு
தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்பட்டதாக வெளிவரும் கருத்துக்கள் தவறானவை என தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகளை குழப்பும் வகையில் பேரவைக்கு எதிரான சிலரால் இவ்வாறு போலிப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டிய பேரவையின் ஏற்பாட்டுக்குழு, இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இனப்பிரச்சினைக்கான தீர்வை தமிழ் மக்களின் ஆலோசனையுடன் ஏற்படுத்தும் பேரவையின் முயற்சி தொடர்பில் வடக்கு மாகாண சபை முதலமைச்சரும், பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் மிகவும் உறுதியாக உள்ளார்.
அதன்படி அரசியல் தீர்வுத் திட்டத்தை தயாரிக்கும் பணிகளில் தமிழ் மக்கள் பேரவையின் உப குழு மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








