ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக யாழில் கறுப்புக் கொடி போராட்டம்! (படங்கள் இணைப்பு)
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஈழ மக்களின் சார்பில் கோரிக்கைகளை முன்வைத்தும் இன்று (புதன்கிழமை) கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
தேசிய பொங்கல் விழா இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக 15 ஆம் திகதி யாழப்பாணம் செல்லவுள்ள நிலையில், இந்த கவனயீர்ப்பு, மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவஜிலிங்கம் இந்த கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், மற்றும் முன்னள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதம் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இவர்களைத் தவிர அரசியல் கைதிகள் மற்றும் காணால் போனோரின் உறவினர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலரும் இந்த ஆர்ப்பாட்ட்தில் பங்கேற்றனர். இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களினால் ஐந்து அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதற்கமைய இனப்படுகொலைக்கு நீதி வேண்டும், மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தத்துடன் இனப்பிரச்சினைக்கு தீர்வு, காணி விடுவிப்பு, காணாமல் போனோர், அரசியல் கைதிகளின் விடுதலை என்பவற்றிற்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள், கறுப்புக் கொடி ஏந்தியிருந்ததுடன், கழுத்தில் கறுப்புத் துணியை அணிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்து.








