பொன்சேகாவின் நியமனம் - பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற நியமனமானது, யுத்தக் குற்றங்களுக்கு தீர்வுகிடைக்குமென அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து காத்திருந்த, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கைத் துரோகம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
யுத்தக் குற்றம் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்படுமென புதிய அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், குறித்த நியமனமானது அதற்கு முரணான வகையில் அமைந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த நியமனமானது, யுத்தக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை அதிலிருந்து பாதுகாக்கும் சமிக்ஞையாகவே உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்புக் கூறல் விடயத்தில் அரசாங்கம் உண்மையாகவும் தீவிரமாகவும் செயற்படவேண்டுமே தவிர, அதனை மூடி மறைக்க எத்தணிக்கக் கூடாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டிய தருணத்தில், நல்லிணக்கம் தொடர்பில் வருந்தத்தக்க கமிக்ஞைகளையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் வெளிப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள அடம்ஸ், யுத்தக் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டுமே தவிர, அவர்களுக்கு உயர் பதவிகளை வழங்குவதில் அர்த்தமில்லையென குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தை வழிநடத்திய சரத் பொன்சேகா, இறுதிக்கட்ட யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்மைக்கு காரணம் என பாதிக்கப்பட்டவர்களாலும் சர்வதேசத்தாலும் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவர். புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர், சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் தரம் வழங்கப்பட்டமையை அடுத்து இலங்கை அரசாங்கம் ஏற்கனவே சர்வதேசத்தின் கண்டனத்திற்கு ஆளானது.
அதேபோன்று இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தின் 57ஆவது படைப்பிரிவை தலைமையேற்று வழிநடத்திய, பாரிய போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருந்த மேஜர் ஜெனரல் ஜகத் டயஸை, இராணுவத்தின் பிரதம அதிகாரியாக புதிய அரசாங்கம் நியமித்தபோதும் இவ்வாறான கண்டனங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.








