Breaking News

புதிய சட்டமா அதிபராக ஜயந்த ஜயசூரிய சத்தியப்பிரமாணம்

இலங்கையின் 29ஆவது சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய, இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இதுவரை சட்டமா அதிபராக கடமையாற்றிய யுவன்ஜய வனசுந்தர கடந்த ஜனவரி மாதம் பதவி விலகியதையடுத்து புதிய சட்டமா அதிபரை நியமிப்பது தொடர்பில் பல முரண்பாடுகள் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில், ஜனாதிபதியால் அரசியலமைப்பு பேரவைக்கு மூவர் பரிந்துரைக்கப்பட்டு, நேற்று ஜயந்த ஜயசூரியவை சட்டமா அதிபராக அரசியமைப்பு பேரவை பரிந்துரை செய்தது.

குருநாகல் மலியதேவ கல்லூரியின் பழைய மாணவரான ஜயந்த ஜயசூரிய, 1979ஆம் ஆண்டு சட்டக் கல்லூரிக்கு பிரவேசித்து 1981ஆம் ஆண்டு சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். 1983ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்த அவர், 2011ஆம் ஆண்டு மேலதிக சொலிஸிட்டர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டார்.

இவர், அங்குலானை பொலிஸ் இரட்டைக் கொலை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் அரசாங்க தரப்பு சட்டத்தரணியாக செயற்பட்டாரென்பது குறிப்பிடத்தக்கது.