Breaking News

உள்ளக விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை - பரணகம

இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகளை சர்வதேச நீதிபதிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் தெரிவித்திருக்கும் நிலையில் உள்ளக விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை என்ற மாற்றுக்கருத்தை பரணகம ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தலைமைதாங்கும் முன்னாள் நீதியரசர் மெக்ஸ்வல் பரணகம இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நீதிப்பொறிமுறையானது முற்றிலும் உள்நாட்டு விடயமாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நீதி முறைமையை ஐ.நா ஆணையாளர் முழுமையான கண்டனம் செய்வது தவறு என கூறியுள்ள மெக்ஸ்வல் பரணகம, அப்படியானால் வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்களைக் கொண்டிருப்பதும் தவறு என்று தெரிவித்துள்ளார்.

ஏனைய நீதித்துறை முறைமைகளைப் போன்றே ஸ்ரீலங்காவின் நீதித்துறையிலும் சில குறைபாடுகள் இருப்பதை ஏற்றுக்கொண்ட அவர், உத்தேச நீதித்துறை பொறிமுறைக்கு இலங்கையைச் சேர்ந்த அதிஉயர்மட்ட கௌரவமும், சிறப்புத் தன்மையும் கொண்டவர்களை நியமிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன், கடந்தகாலங்களில் ஸ்ரீலங்கா நீதித்துறை முழுமையான அரசியல் கட்டுப்பாட்டில் இருந்தபடியால் சர்வதேச மட்டத்தில் இலங்கை மீதான நம்பிக்கை வலுவிழந்திருந்ததாக சுட்டிக்காட்டியிருந்தார்.

இதன் காரணமாக போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்குத் தொடுநர்களின் ஒத்துழைப்பு இலங்கைக்கு அவசியம் என்ற விடயத்தையும் கோடிட்டுக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை விடயத்தில் ஐ.நா மனித உரிமை பேரவை ஆரம்பத்திலும், தற்போதும்கூட சர்வதேச பங்களிப்புடன் கூடிய கலப்புவகையான பொறிமுறை ஒன்றையே விரும்புகின்றது என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான விஜயத்தின் பின்னர் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் எமது விருப்பமும் இன்னும் எமது விருப்பமும் சர்வதேச பங்களிப்புடன் கூடியதான கலப்பு ரக பொறிமுறையொன்றாகவே இருக்கின்றது என மனித உரிமைகள் ஆணையாளர் தெளிவாக கூறியுள்ளார்.பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்கு சர்வதேச பங்களிப்பு அவசியமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கை அரசாங்கத்தின் மீது நாம் எதனையும் திணிக்கவில்லை. ஜனாதிபதி தமது விருப்பை அவரது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். நாம் எமது விருப்பை வெளிப்படுத்தியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் உள்ளகப் பொறிமுறை ஊடாக விசாரணையை எதிர்கொண்டவர்கள் நீதியை எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றத்திற்குள்ளான நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தேசியப் பொறிமுறையொன்றின் மீது நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்பதை பேரவை நம்புகின்றது என்று ஆணையாளர் கூறியுள்ளார்.

இலங்கை தீர்மானிப்பது எதுவாக இருந்தாலும், அதற்கு பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினரதும் ஆதரவு இருக்குமேயானால் எம்மைப்பொறுத்தவரை அது ஏற்புடையது.அந்தப் பொறிமுறை பக்கச்சார்பாக இல்லாமலும், சுயாதீனமானதாக இருக்குமிடத்தில் அது வரவேற்கத்தக்கது – என்று மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.