யாரிடமும் விலைபோக வேண்டிய நிலையில் எனது வாழ்வாதாரம் இல்லை - சிவமோகன்
யாரையும் விலைக்கு வாங்க வேண்டிய தேவை தமிழரசுக் கட்சிக்கோ அல்லது யாரிடமும் நிதி வாங்கும் தேவை தமக்கோ இல்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) உறுப்பினராக இருந்த சி.சிவமோகன் அண்மையில் அந்தக் கட்சியிலிருந்து விலகி இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டார்.
இந்நிலையில் இது தொடர்பில் மட்டக்களப்பில் வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியில் தொடர்ந்து செயற்பட விருப்பம் இன்மை காரணமாக தமிழரசுக் கட்சியில் இணைந்துக் கொண்டதாக தெரிவித்தார்.
மேலும் ‘சுய தேவைக்காக யாரிடமும் விலைபோக வேண்டிய நிலையில் எனது வாழ்வாதாரம் இல்லை. அத்தோடு யாரையும் விலைக் கொடுத்து வாங்க வேண்டிய தேவை தமிழரசுக் கட்சிக்கு இல்லாததுடன், அதற்கான நிதி வல்லமையிலும் அக்கட்சி இல்லை எனக் குறிப்பிட்டார்.
அத்துடன், உத்தியோகப்பூர்வமாக பதவி விலகல் குறித்து அறிவிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு அவதூறு கருத்துக்களை வெளியிடுவது சிறுபிள்ளைத் தனமான செயல் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.








