ஆளும் கட்சி உறுப்பினர்கள் இரண்டு பிரிவாக கூடுகின்றனர்!
இதற்கு முன்னர் நடைபெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் இன்று இரண்டு பிரிவுகளாக கூடுவதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இன்று (23) முற்பகல் 11.30இற்கு இந்தக் கூட்டங்கள் தனித்தனியே நடைபெறவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.இதற்கு முன்னர் ஆளும் கட்சி உறுப்பினர் கூட்டம் ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் பிரசனத்துடன் நடைபெற்ற வந்தன.
இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மீது, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும், வெளிவிவகார அமைச்சருமான மங்கள சமரவீர கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இதன்பின்னரே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தனித்து கூடுவதென தீர்மானித்துள்ளனர்.
இதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியிலும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் கூட்டம் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலும் கூடுகிறது.
எனினும், ஆளும் கட்சி உறுப்பினர்கள் தற்போது தனித்தனியே கூட்டங்களை நடத்துவது நல்லாட்சி அரசாங்கத்திற்குள்ள புரிந்துணர்வில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவே அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.