மலையகத் தமிழர்களை ராஜபக்ச அரசுக்கு எதிராகத் திருப்பிவிட்டது ‘ரோ’ தான் – கோத்தா
மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக, மலையகத் தமிழர்களின் வாக்குகளை திசைதிருப்பி விட்டது இந்தியப் புலனாய்வுப் பிரிவான ‘ரோ’ தான் என்று, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
”அதிபர் தேர்தலில் நாங்கள் தோல்வியை எதிர்பார்க்கவில்லை. இந்தியாவுடன் சில பிரச்சினைகள் இருந்தது எமக்குத் தெரியும். ஆனால் அது மிகவும் கடினமாக இருந்தது.
காலி கலந்துரையாடலில், முக்கிய உரையாற்றுவதற்காக, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை அழைத்திருந்தோம். இந்தியாவின் புலனாய்வுப் பிரிவான ‘ரோ’, ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக பணியாற்றுகிறது என்று அவரிடம் நான் கூறியிருந்தேன்.
எப்படி இது நடக்கிறது என்று அவரிடம் கேட்டேன். அதிபர் ராஜபக்ச தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று அவர் கூறினார்.
அப்படியென்றால் ‘ரோ’வின் பங்கு என்னவென்று நான் கேட்டேன்.எமக்கு எதிராக மலையகத் தமிழர்களின் வாக்குகளை மாற்றி விட்டதற்கு ‘ரோ’ தான் பொறுப்பு என்று நான் உறுதியாக கூறுகிறேன்.இதையிட்டு எம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. அது கடினமாக இருந்தது. அவர்களின் பிரதான பிரச்சினையாக இருந்தது சீனா தான்.
இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களாக இருந்த எம்.கே.நாராயணன், சிவ்சங்கர் மேனன் போன்றவர்கள் எல்லாம் அந்தக் கட்டத்தில் புலிகளின் எதிர்ப்பாளர்களாக இருந்தனர்.
ஆனால், மேற்குலகம் குறித்து நான் மகிழ்ச்சியடையவில்லை. சட்ட நிறுவனங்களை பணிக்கு அமர்த்தி புலம்பெயர்ந்தோர் எமக்கு எதிராக பரப்புரை செய்தனர். அவர்களால் சிறிலங்கா அரசாங்கத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது” என்றும் அவர் கூறியுள்ளார்.