Breaking News

நாடாளுமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்போவதாக மஹிந்த தரப்பு எச்சரிக்கை

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவது தொடர்பில் சாதகமான பதிலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்காவிட்டால் இன்று(செவ்வாய்கிழமை) முதல் சபை நடவடிக்கைகளை குழப்பும் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என மஹிந்த ஆதரவு அணி எச்சரித்துள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கடந்த நாடாளுமன்ற அமர்வில் உறுதிமொழி வழங்கியதற்கு அமைய இன்றைய தினம் இதுதொடர்பிலான இறுதி முடிவை எதிர்பார்ப்பதாக மஹிந்த ஆதரவு அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி.சொய்சா தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பித்தபோது எதிர்க்கட்சியில் உள்ள 52 ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு தம்மை சுயாதீன குழுவாக செயற்பட அனுமதிக்குமாறு எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பில் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் தீர்வொன்றைத் தருவதாக பிரதமரும், சபாநாயகரும் தெரிவித்திருந்தனர். இதற்கமைய இன்றைய தினம் அவர்கள் தீர்வொன்றை வழங்க வேண்டும் எனவும் ரஞ்சித் டி.சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் காலத்தில் சுயாதீனக் குழுவாக உண்மையான எதிர்க்கட்சியாக தாம் செயற்படுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும், சுயாதீனக் குழுவாக செயற்படுவதற்கு சாதகமான பதிலை வழங்காவிட்டால் இன்றுமுதல் சபை அமர்வுகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தம்மை சுயாதீனக் குழுவாக அங்கீகரிக்கக் கோரி மஹிந்த ஆதரவு அணியினர் கடந்த நாடாளுமன்ற அமர்வில் இரண்டு தினங்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர். முதல்நாள் சபை நடுவில் போராட்டத்தில் ஈடுபட்ட மஹிந்த ஆதரவு அணியினர், தம்மை அங்கீகரிக்குமாறு கோஷங்களை எழுப்பியிருந்தனர். எனினும் அவர்களுடைய குழப்பத்துக்கு மத்தியிலும் உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இரண்டாவது நாளாகவும் இது விடயம் தொடர்பில் மஹிந்த ஆதரவு அணியினர் நாடாளுமன்றத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தனர்.