Breaking News

சமஷ்டி வழிமுறையை பெற்றுத் தருவதற்கு, இந்தியா உதவ வேண்டும்

குறைபாடுகள் அற்ற ஒரு சமஷ்டி வழிமுறையை பெற்றுத் தருவதற்கு, இந்தியா உதவ வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம், இந்திய அரசினால் வழங்கப்படுகின்ற புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள், மாணவர்களுக்கான மனிதவள முகாமைத்துவங்கள் தொடர்பான பயிற்சி நெறிகளை இந்தியாவில் பூர்த்திசெய்த மாணவர்களைக் கௌரவிக்கும் முகமாக, இந்தியத் துணைத்தூதுவர் அலுவலகத்தினால் நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வடக்கு முதல்வர் இதனைத் தெரிவித்தார்.

‘இந்தியாவின் புலமைப்பரிசில் திட்டமானது கடந்த 50 வருடங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் கடந்த 2010ஆம் ஆண்டுவரை வட பகுதியிலிருந்து எந்தவொரு மாணவரோ அல்லது உத்தியோகத்தரோ இப்பயிற்சிநெறிகளுக்கு அனுப்பிவைக்கப்படவில்லை.

எனினும் 2010ஆம் ஆண்டில் இந்தியாவுக்கான துணைத்தூதுவர் அலுவலகம் யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், இப் புலமைப் பரிசில் வாய்ப்புக்கள் வடபகுதியைச் சேர்ந்த மாணவர்களில் மட்டுப்படுத்தப்பட்ட சிலருக்கு கிடைக்கப்பெற்றது. நடராஜன் அவர்கள் இந்தியத் துணைத்தூதுவராக தமது கடமைகளை யாழ்ப்பாணத்தில் பொறுப்பேற்றவுடன் அவர் செய்த முதற் கடமைகளில் ஒன்று, யாழ்ப்பாணத்தில் இருந்து ஆகக் குறைந்தது 25 பேரையாவது இந்த புலமைப்பரிசில் திட்டங்களின் கீழ் இந்தியாவிற்கு அனுப்புவதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டமையே. அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நெறிப்படுத்தியது மட்டுமன்றி எமது அலுவலகத்துடனும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி, முடியுமானவரை மிகக் கூடிய மாணவர்களை இத்திட்டத்தின் கீழ் இணைத்துக் கொள்வதற்கு வழிவகுத்தார். அவரின் முயற்சியின் பயனாக, 2015 – 2016 காலப்பகுதியில் 25 பேர் இப் பயிற்சி நெறிகளுக்கு தெரிவு செய்யப்பட்டு பயிற்சிகளை முடித்துக் கொண்டு வடபகுதிக்கு திரும்பியிருக்கின்றனர். இதற்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

இன்றைய நிகழ்வுகளில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் அனைவரும் மாணவர்களாக கலந்துகொண்டு இப்பாராட்டுகளைப் பெறுவது அவர்களுக்குக் கடந்த கால கல்லூரி நிகழ்வுகளையும் அவற்றின் நினைவுகளையும் மீட்டுகொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமையுமென கருதுகின்றேன்.

நீண்டகால யுத்தத்தின் பின்பாக வடபகுதியின் மீள் நிர்மான கட்டுமாணப் பணிகள், அனைத்து வழிகளிலும் மேற்கொள்ளப்படுகின்ற இந்த வேளையில், இந்தியாவும் தனது பங்களிப்பை எமக்கு வழங்குவதற்கு தவறவில்லை. புலமைப்பரிசில்கள், நோயாளர் காவு வண்டிகள் சேவை, முதலீட்டாளர்களின் வருகை, தொழில் முயற்சிகளுக்கான பங்களிப்புகள் என பல வழிகளில் எமக்கு உதவிவருவது எமக்கு ஆறுதலைத் தருகின்றன. குறைபாடுடைய 13ஆவது திருத்தச் சட்டத்தை முன்னர் எமக்குத் தந்த இந்திய அரசாங்கம், இம்முறை குறைபாடற்ற ஒரு சமஷ்டி வழிமுறையை எமக்குப் பெற்றுத் தரவேண்டும் என்று இத்தருணத்தில் கேட்டுக் கொள்கின்றேன். இது இந்தியாவால்தான் முடியும் என்பது எனது கருத்து.

புதிய பல நல்ல திட்டங்கள் மூலம் எமது மக்களுக்கு தொடர்ந்து நன்மையளிக்கக்கூடிய விதத்தில் உதவுவதுடன், இலங்கை இந்திய உறவு மிகவும் நெருக்கமாகத் தொடர்ந்து பேணப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்’ என்றார்.