Breaking News

தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்கள் பாதுகாக்கப்படவேண்டும் - அங்கஜன் கோரிக்கை

தமிழ் அரசர்கள் வாழ்ந்த இடங்களும் தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களும் பாதுகாக்கப்பட வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற உடுவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில், இணைத்தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

குறிப்பாக கந்தரோடை பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பகுதிகள், புராதன வரலாற்று சின்னங்கள், தமிழ் அரசர்களின் அடையாளங்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால், அவை தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தினால் ஆய்வு செய்யப்பட்டு யாழ்.நூதனசாலையில் பேணப்படவேண்டும் என்றார்.

குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், இம்முறை நெற் செய்கையில் பாரிய நட்டத்தை எதிர்கொண்டதாகவும் வாய்க்கால் வழியாக நீர் ஓடுவதற்கான வசதி இன்மையே அதற்குக் காரணம் என்றும் குறிப்பிட்டனர். இதனையடுத்து, குறித்த வாய்க்காலை புனரமைத்து நீர் வழிந்தோடுவதற்கான வசதியை ஏற்படுத்தித் தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டார்.