அல்–ஹுசைனை சந்திப்பதற்கு அனுமதி பெற்றுத்தாருங்கள் - காணாமல்போனவர்களின் உறவுகள் கோரிக்கை
யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைனை சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு ஏற்ற ஒழுங்குகளை ஏற்படுத்தித்தருமாறு வடமாகாண முதலமைச்சரிடமும் யாழில் அமைந்துள்ள ஐ.நா.விற்கான அலுவலக அதிகாரியிடமும் காணாமல் போன உறவினர் கோரிக்கை கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.
காணாமல் போனோரின் உறவினர்கள் யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்ற மண்டபத்தில் நேற்றைய தினம் ஒன்றுகூடி கலந்துரையாடியதையடுத்தே குறித்த கோரிக்கைக் கடிதங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
குறித்த கோரிக்கைக் கடிதம் கையளிக்கப்பட்டமை தொடர்பில் காணாமல் போன உறவினர்கள் கருத்துத் தெரிவிக்கையில்
ஐ.நா.விற்கான மனித உரிமை ஆணையாளர் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளும்போது நாம் அவரைச் சந்தித்து அவரிடம் எமக்கு நடந்த இன்னல்கள், கொடுமைகள் தொடர்பில் எடுத்தியம்ப உள்ளோம். பல வருடகாலமாக எமக்கு இடம்பெற்ற பிரச்சினைக்குத் தீர்வின்றி அலைக்கழிக்கப்பட்டு வருகின்றோம். கடந்த அரசாங்கம் எமது பிரச்சினைக்குத் சரியான தீர்வு வழங்காமல் ஏமாற்றியமையினாலேயே அவர்களை தேர்தலில் வாக்குப் பலத்தால் வீட்டுக்கு அனுப்பி வைத்தோம்.
இந்நிலையில் புதிதாக வந்த தற்போதைய தேசிய அரசாங்கம் எமக்கான தீர்வைப் பெற்றுத் தருமென எதிர்பார்த்திருக்கிறோம். இந்நிலையில் இதுவரை முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை.
குறிப்பாக வடபகுதிக்கு வரும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொறுப்பான பொறுப்புகளில் இருப்பவர்கள் கூட எமது பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் வழங்கவில்லை. காணாமல் போன உறவுகள் உயிரிழந்திருக்கலாம் என்ற கருத்தினை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் முன்வைத்திருக்கிறார். இத்தகைய கருத்துக்கள் எம்மை மேலும் சோகத்திற்கு ஆளாக்கியுள்ளன.
எமது உறவுகளை கண்டுபிடிக்க வலியுறுத்திப் பல்வேறு போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், கறுப்புப்பட்டிப் போராட்டங்கள் போன்றவற்றை மேற்கொண்டும் எந்தப் பயனும் இல்லை.
எனவேதான் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரை சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் யாழ். நல்லூர் வீதியில் அமைந்துள்ள ஐ.நா.அலுவலக அதிகாரியிடம் நேற்று மாலை கோரிக்கைக் கடிதமொன்றை ஒப்படைத்துள்ளோம் என்றனர்.








