ஐ.நா.பிரதிநிதிகளின் வருகையின் பின்னணி மிகவும் மோசமானது - என்கிறார் மஹிந்த
யுத்தம்செய்ய அழைத்தபோது ஓடி ஒழிந்தவர்கள் இன்று நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக்கொடுக்க சர்வதேசம் அழைப்புவிடுத்தவுடன் முன்வந்து நிற்கின்றனர். இலங்கையை கறைபடிந்த நாடாக மாற்றி சர்வதேசத்தின் முழுமையான விசாரணையை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளின் வருகையின் பின்னணி மிகவும் மோசமானது. நாட்டை துண்டாட திட்டம் தீட்டப்படுகின்றது எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இன்று இலங்கை வரும் நிலையில் அது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த காலத்தில் இந்த நாட்டில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர எவரும் முன்வராத நிலையில் இந்த நாட்டை உண்மையில் நேசித்த நாம் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளுடன் ஆயுதப் போராட்டம் செய்ய தயாரானோம். இந்த நாட்டில் மூவின மக்களையும் அமைதியாக வாழவிட வேண்டும் என்ற எண்ணம் எம்மத்தியில் இருந்தது. அதற்கமைய நாம் ஆட்சியமைத்து நான்கு ஆண்டுகளுக்குள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தோம்.
அதன் பின்னர் இந்த நாட்டை துரித அபிவிருத்தியின் பாதையில் கொண்டு சென்றோம். யுத்தம் முடிவுக்குக் வந்த நாடொன்று மிக குறுகிய காலத்தில் தனது பொருளாதார தன்மையிலும், ஐக்கியத்திலும் முன்னேற்றம் கண்டதென்றால் அது எமது நாடு மட்டுமேயாகும்.
ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாடாக இலங்கையை மாற்றி நாட்டின் பொருளாதாரத்திலும், சுற்றுலா துறையிலும் பாரிய மாற்றத்தை கொண்டுவந்தோம். இவ்வாறு பல வரலாறுகளை மிகக்குறுகிய காலத்தில் எம்மால் செய்துமுடிக்க முடிந்தது. ஆனால் அவற்றை எல்லாம் மறந்தவர்கள் யுத்த குற்றச்சாட்டு பற்றிய கதைகளை மாத்திரமே பேசிக்கொண்டுள்ளனர். நாம் பொதுமக்களுக்கு எதிராகவோ அல்லது ஒரு இனத்தவரை அழிக்கவேண்டும் என்ற எண்ணத்திலோ யுத்தம் செய்யவில்லை.இந்த நாட்டை துண்டாட நினைத்த , நாட்டில் மூவின மக்களுக்கும் எதிராக ஆயுத போராட்டம் நடத்திய பயங்கரவாதிகளை மாத்திரமே நாம் அழித்தோம்.
அன்று யுத்தம்செய்ய அழைத்தபோது ஓடி ஒளிந்தவர்கள் இன்று நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக்கொடுக்க சர்வதேசம் அழைப்புவிடுத்தவுடன் முன்வந்து நிக்கின்றனர். சர்வதேசத்திடம் எம்மை காட்டிக்கொடுத்து இறுதியில் இந்த நாட்டை துண்டாடவே இவர்கள் அனைவரும் முயற்சிக்கின்றனர்.
அதற்கு இடம்கொடுப்பதா அல்லது இந்த நாட்டை காப்பாற்றிய எமது இராணுவ வீரர்களை பாதுகாப்பதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். அதற்கான தீர்மானங்களை எடுக்கவேண்டும். இப்போது மக்கள் வேடிக்கை பார்க்கும் ஒவ்வொரு தருணத்திலும் சர்வதேசம் எம்மீதான ஆக்கிரமிப்பை பலப்படுத்தி நாட்டை துண்டாட ஆரம்பித்துவிடும்.
மனித உரிமைகள் ஆணையாளர், ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளின் வருகையின் பின்னணி மிகவும் மோசமானது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி கொடுத்தது மட்டுமல்லாது அவர்களின் நிகழ்ச்சி நிரலை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் முழுமையான அழுத்தம் கொடுத்து வருகின்றனர். உண்மைகளை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.








