Breaking News

மீனவர் பிரச்சனை தொடர்பில் சுஸ்மாவிடம் அறிக்கை

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக விரிவான அறிக்கையொன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் கையளிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறும் இந்திய மீனவர்கள் ரோலர்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன் பிடி முறைகள் மூலம் இலங்கை கடற்பரப்பில் மீன் வளங்களை அள்ளிச் செல்வதும் இதன் மூலம் கடல் தாவரங்கள் அழிவதும் பாரிய பிரச்சினையாகயுள்ளன.

இந்திய மீனவர்களின் அத்துமீறலை எனது கண்களால் நேரில் கண்டேன். இவ்வாறு அத்துமீறும் தமிழக மீனவர்கள் அப்பாவிகள். அவர்கள் பயன்படுத்திய படகுகளின் உரிமையாளர்கள் தமிழக அரசியல் தலைவர்களே ஆவார்கள்.

எனவே தான் தமிழகத்தில் மீனவர்களை தூண்டிவிட்டு போராட்டங்களை நடத்துகின்றனர். அத்து மீறியதால் கைப்பறறப்பட்ட மீனவர்களின் படகுகள் எந்த அழுத்தத்திற்கும் பயந்து திருப்பி கையளிக்கப்படமாட்டாது.

மீனவர்கள் மனிதாபிமானத்துடன் விடுதலை செய்யப்படுவார்கள். அதேவேளை இப்பிரச்சினை தொடர்பாக தமிழகத்துடன் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட மாட்டாது.

இலங்கை அரசாங்கம் இந்திய மத்திய அமைச்சுடனேயே இவ்விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தும். இந்திய மீனவர்களின் அத்து மீறல்களால் எமது கடல் வளம் அழிக்கப்படுவதோடு வடபகுதி எமது மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.

இவையனைத்தும் அடங்கிய முழுமையான அறிக்கை ஒன்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.