கொள்ளையடித்த பணத்தை கண்டறிய முடியவில்லை! என்கிறார் பிரதமர்
முன்னைய ஆட்சியின்போது கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 1000 பில்லியன் ரூபாவை தற்போதைக்கு இனங்கண்டுள்ளோம். இது தொடர்பில் பாராளுமன்ற ஆலோசனை குழு அமைத்து விசாரணை செய்யவுள்ளோம்.
குறித்த விசாரணைகள் முடிந்த பின் எவருக்கு எதிராக வேண்டுமானாலும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர முடியும். அமைச்சருக்கு எதிராகவே பிரேரணை தாக்கல் செய்ய வேண்டியதில்லை. அதற்கு மாறாக சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரமுடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எனவே விசாரணை முடிந்த பின்னர் உரிய நபருக்கு எதிராக உரிய நேரத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை நாங்கள் கொண்டு வருவோம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும் யுத்தத்தின் போது மீட்கப்பட்ட தங்க நகைகள் தொடர்பில் எனக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 180 கிலோகிராம் நகைகளை அரசாங்கத்திடம் வழங்கியதாக இராணுவம் கூறியது. எனினும் தற்போதைக்கு அத்தகைய தொகை எம்மிடம் இல்லை. இது குறித்து முன்னாள் இராணுவ தளபதி சரத் பென்சேகாவிடம் கேட்ட போது ,220 கிலோகிராம் நகையை மொத்தமாக அரசிடம் கையளித்ததாக கூறினார். இந்த விடயத்தில் அரசு என்ற வகையில் நாம் என்ன செய்வது? யார் இதற்கு பொறுப்பு கூறுவது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
முன்னைய ஆட்சியின் போது கொள்ளையிட்ட பணங்களை மலையக மக்களுக்கு வீடமைப்பதற்கு செலவிட்டிருந்தால் அங்கு மாளிகைகள் நிர்மாணித்திருக்க முடியும் ,வடக்கில் காணிகளை வழங்கியருக்க முடியும். நல்லாட்சி அரசில் மக்களுக்கான உரிமைகளையும் உடைமைகளையும் மீளவும் மக்களுக்கே வழங்கியிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
மலையக அபிவிருத்திக்கான ஐந்தாண்டு திட்டத்திற்கான வரைவினை நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு மலையக புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பி. திகாம்பரம் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,
மலையகத்தில் சமூக அபிவிருத்தியை மையமாக கொண்டு அமைச்சர் பி.திகாம்பரத்தினால் ஐந்தாண்டு வேலைத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே இதுவரைக்காலமும் இல்லாத அளவிற்கு மலையகம் முன்னேற்றம் கண்டு வருகின்றது. தற்போது மலையக தமிழ் மக்களிடம் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன .இதனை தீர்ப்பதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். இதன்படி ஐந்தாண்டில் மலையத்தின் கல்வி ,சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்தவுள்ளோம். அதேபோன்று லயன்களை ஒழித்து வீடுகளை நிர்மாணிப்போம். தோட்ட தொழிலாளர்களுக்கு காணி உறுதியையும் வழங்குவோம். ஆகவே இதனை முன்னெடுத்து செல்வதற்கு மலையகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
மலையக அபிவிருத்தி
இதேவேளை மலையகத்தை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டங்களை கடந்தம காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் 1991 ஆம் ஆண்டு முதல் குறித்த வேலைத்திட்டத்தினை எம்மால் முன்னெடுக்க முடியாமல் போனது. இதன்படி 20 வருடங்கள் எந்தவொரு அபிவிருத்தியையும் முன்னெடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தபின்னர் இது தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு எம்மால் முடிந்துள்ளது.
மலையகத்தவர்களின் கஷ்டங்கள் குறித்த நன்கு அறிந்த பி. திகாம்பரத்திற்கு குறித்த பொறுப்புகளை வழங்கியுள்ளோம். அவர் தனது கடமையை சரிவர நிறைவேற்றுவார். மேலும் மலையகத்தில் கல்வி துறையை மேம்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம். நான் கல்வி அமைச்சராக இருந்தபோது மலையகத்தில் தேசிய பாடசாலைகள் தொடர்பில் பொறுப்பாளராக இருந்து வேலைகளை செய்து முடித்தேன். எனினும் தற்போது பிரதமராக நான் வந்துள்ள தருணத்தில் விஞ்ஞான பாடநெறியுடன் கூடிய பாடசாலைகளை நாம் மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பில் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளது. இது மக்களுக்குள்ள உரிமையை வழங்குவதற்கான பிரதான வேலைத்திட்டமாகும்.
யுத்தத்தின் நிறைவடைந்த பின்னர் சமாதானம் எமது நாட்டு மக்களுக்கு கிடைக்கவில்லை. நாம் இலங்கையர் என்ற வகையில் வாழ்வதற்கும் கடந்த காலங்களில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கும் எம்மால் முடியாமல் போனது. அதேபோன்று சமாதானத்துடன் கூடிய அபிவிருத்தியை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாமல் போனது. விவசாயிகளுக்கு காணி உறுதி இருக்கவில்லை. யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு காணிகளோ வீடுகளோ பெற்றுக்கொடுக்கப்படவில்லை. மறுபுறத்தில் வீடுகளுக்கான உரிமைகள் இல்லாதவர்களாக மலையக மக்கள் உள்ளனர். இதன்படி மக்களுக்கான உரிமைகளை மக்களுக்கு வழங்குவதற்கே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிபீடமேறினார். இது புரட்சிகரமான மாற்றமாகும்.
முன்னைய ஆட்சியின் கொள்ளைகள்
எனினும் மக்களுடைய உரிமைகளையும் உடைமைகளையும் முன்னைய அரசாங்கம் கொள்ளையிட்டது. எவற்றை கொள்ளையிட்டார்கள் என்பது தொடர்பில் எதுவுமே கண்டறிய முடியாமல் உள்ளது. எதனை கொள்ளையிட்டார்கள் என்பது குறித்து தேடி ஆராய்ந்து வருகின்றோம். தற்போதைக்கு கொள்ளையிட்ட பணங்களில் 1000 பில்லியன் ரூபாவை இனங்கண்டுள்ளோம். அத்துடன் எட்டு விமானங்களை கொள்வனவு செய்வதற்கு பாரிய நிதி செலவிடப்பட்டுள்ளது. விமான கொள்வனவிற்கு 211 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளனர். அதுபோன்று இதனை பார்க்கிலும் எஜின் ஒப்பந்த்திற்கு இதனைவிட 18 மடங்கு செலவிடப்பட்டுள்ளது. இந்த பணத்தைக் கொண்டு மலையத்தில் மாளிகைகள் அமைத்திருக்க முடியும். ஐந்தாண்டு திட்டத்தை முழுமையாக முடிப்பதற்கு 100 பில்லியன் ரூபாவே தேவைப்படுகின்றது.
எனினும் முன்னைய ஆட்சியாளர்களினால் கொள்ளையிட்ட பணங்களை கொண்டு வடக்கு தமிழ் மக்களுக்கும் ,மலையக தமிழ் மக்களுக்கும், கிழக்கில் முஸ்லிம்களுக்கும் வீடுகளை அமைத்து கொடுத்திருத்திருந்தால் நாடு முன்னேற்றம் அடைந்திருக்கும்.
மக்களின் பணத்தில் மாட மாளிகைகள்
அதேபோன்று யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு தமிழ் மக்களுக்கு வீடுகள் இல்லை. ஆனாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் தங்குவதற்கு மாளிகை அமைத்திருந்தார். அண்மையில் நான் கிழக்கின் பாணமவிற்கு சென்றிருந்த வேளை,அங்கு மூன்று மாளிகைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதன்படி ஒரு மாளிகைகளில் மூன்று நீச்சல் தடாகங்கள், மூன்று மதுபான சாலைகள், மூன்று உடற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவை தேவையற்ற செலவீனங்களாகும்.
இருந்தாலும் மலையகத்தில் இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு மலசல கூடம் இல்லை. யாழ்ப்பாணத்தில் தங்குவதற்கு வீடு இல்லை. முன்னைய ஆட்சியாளர்களிடம் கொள்ளையிடுவதற்கே விசேட வேலைத்திட்டம் காணப்பட்டது. இந்நிலையில் மூடி மறைக்கப்பட்டிருந்த கடன் தொகைகளுக்கான செலவீனத்தையும் தற்போது நாமே தீர்க்க வேண்டியுள்ளது. கடன்களை செலுத்தி கொண்டும் நாம் வீடமைப்பு திட்டங்களை கைவிடவில்லை. மாறாக அபிவிருத்தி பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்கின்றோம். எனவே முன்னைய ஆட்சியின் போது இடம்பெற்ற கொள்ளைகள் தொடர்பில் ஆராயுமாறு பாராளுமன்றத்திற்கு கூறியுள்ளேன்.
நம்பிக்கையில்லா பிரேரணை
இந்நிலையில் கொள்ளையிட்டவர் தொடர்பில் ஆராயநாம் முயற்சிக்கும்போது சிலர் அச்சத்தின் காரணமாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதற்கு முனைகின்றனர். எவ்வாறாயினும் முன்னைய ஆட்சியின் போது கொள்ளையிடப்பட்டவைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஆராய்ந்து விசாரணைகள் முடிந்த பின்னர் நம்பிக்கையில்லா பிரேரணைகளை எனக்கு எதிராகவோ அல்லது அரசின் அமைச்சர்களுக்கு எதிராகவோ கொண்டு வர முடியும். அமைச்சர்களுக்கு எதிராகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர வேண்டியதில்லை.
சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரமுடியும். இதற்காக பாராளுமன்ற ஆலோசனை குழு அமைத்து விசாரணை செய்த பின்னர் எம்.பி. ஒருவருக்கு எதிராக நம்பிக்கை பிரேரணை கொண்டு வரப்படும். விமானங்கள் கொள்வனவிற்கான செலவிட்டதை மலைய மக்களுக்கு செலவிட்டிருத்திருந்தால் பிரச்சினைகள் பல தீர்ந்திருக்கும்.
வடக்கு மக்களின் தங்கத்தில் ஏற்பட்ட சிக்கல்
அத்துடன் எனக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டது. யுத்தத்தின் போது வடக்கு மக்களுக்கு சொந்தமான 180 கிலோ தங்கம் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டதாக இராணுவம் குறிப்பிட்டது. ஆனாலும் இது தொடர்பில் முன்னாள் இராணுவ தளபதி என்ற வகையில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவிடம் நான் கேட்ட போது, 220 கிலோகிராம் தங்கத்தை அரசாங்கத்திடம் தான் கையளித்ததாக குறிப்பிட்டிருந்தார். இந்த தொகை எம்மிடம் இல்லை. எனவே இது தொடர்பில் நாம் என்ன செய்வது? இதற்கு யார் பொறுப்பு கூறுவது?. இதன்மூலமாக வந்த பென்ஸ் கார்களுக்கு யார் பொறுப்பு கூறுவது? எவ்வாறாயினும் நல்லாட்சி அரசாங்கத்தினால் மக்களின் உரிமைகளை நாம் மக்களுக்கே பெற்றுக்கொடுப்போம் என்றார்.








