பிரபாகரன் இறந்த பின்னரே யுத்த வெற்றி அறிவிக்கப்பட்டது
இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னரே யுத்த வெற்றி அறிவிக்கப்பட்டதாகவும், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா குறிப்பிடுவது போன்று யுத்த வெற்றி அறிவிக்கப்பட்டதன் பின்னரும் அவர் உயிருடன் இருக்கவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினரும், அப்போதைய பாதுகாப்பு தரப்பு பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இறுதி யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் பிரபாகரன் உயிருடன் இருந்தார் என ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அவருடைய கூற்று தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்த போது கெஹெலிய ரம்புக்வெல்ல இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் அந்த ஊடகத்திற்கு தொடர்ந்து குறிப்பிட்டதாவது :-
‘சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் அனைத்தும் பொய்யான கருத்துக்களாகும். அதேபோல் பாரளுமன்றத்தில் அவரின் உரையை அவதானிக்கும் போதும் அதில் முழுமையாக மஹிந்த ராஜபக்ஷ மீதும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதும் வைராக்கியத்துடனும் பழிவாங்கும் நோக்கத்துடனும் மாத்திரமே உள்ளார் என்பது தெளிவாகத் தெரிகின்றது.
விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கத்தை பலப்படுத்தும் வகையில் ராஜபக்ஷ குடும்பம் பணம் கொடுத்ததாகவும் பசில் ராஜபக்ஷ புலிகளை பலப்படுத்தி செயற்பட்டார் என்று கூறுவதும் முழுமையான பொய்யாகும்.
இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். பசில் ராஜபக்ஷவோ அல்லது கோட்டாபய ராஜபக்ஷவோ புலிகளுடன் நெருக்கத்தை பேணியிருந்தால் அப்போதே அவர் இதை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். நாட்டின் மீதும் இராணுவத்தின் மீதும் பற்று கொண்ட நபர் ஏன் அப்போது இந்த உண்மைகளை மறைக்க வேண்டும். அப்படியாயின் அவரும் புலிகளுக்கு உடந்தையாக செயற்பட்டிருக்க வேண்டும்.
மேலும் வெள்ளைக்கொடி விவகாரத்தில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கூறுகின்றார். இந்த விவகாரத்தில் உண்மையான விசாரணைகளை முன்னெடுத்தால் இந்த குற்றசாட்டில் முதல் குற்றவாளியாக சரத் பொன்சேகாவே சிக்குவார். அவரின் தலைமையில் இடம்பெற்ற மிகப்பெரிய குற்றம் இதுவென்பதை என்பதை மறந்துவிட்டோ அல்லது இந்த விவகாரத்தில் அவர்மீது இருக்கும் குற்றங்களை மறைத்துவிட்டோ வேறு ஒரு வகையில் செயற்பட பார்க்கின்றனர்.
மஹிந்த, கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை பழிவாங்கும் எண்ணத்தில் அவர்களை போர்க்குற்றவாளிகள் என்று சர்வதேச ரீதியில் தண்டிக்கும் முயற்சியில் அப்பாவி இராணுவத்தையும் சேர்த்து தண்டிக்கவே முயற்சிக்கின்றனர். மிகவும் மோசமான பயங்கரவாதிகளுடன் போரிடும் போதும் பல இலட்சம் தமிழ் மக்களை வடக்கில் இருந்து காப்பாற்றும் மனிதாபிமான போராட்டத்தின்போதும் ஒரு சில தவறுகள் நடைபெறும். அதை தவிர்க்க முடியாது.
இந்த கருத்தை பல்வேறு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டெஸ்மன் டி சில்வா தனது அறிக்கையிலும் இந்த காரணத்தை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் இவ்வாறான சிறுசிறு காரணிகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு மனித உரிமை மீறல்கள் நடந்தேறியது என கூறுவதை நாம் ஏற்றுககொள்ளப்போவதில்லை.
மேலும் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருந்தார் என சரத் பொன்சேகா தெரிவித்தமையும் பொய்யான கருத்தாகும். பிரபாகரன் கொல்லப்பட்டது உறுதியான பின்னரும் கொல்லப்பட்டது அவர் தான் என பல தடவைகள் உறுதிப்படுத்திய பின்னருமே நாம் யுத்த வெற்றியை அறிவித்தோம்.








