யோஷிதவிற்கு பிணை
சீ.எஸ்.என் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, குறித்த நால்வரின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்களின் பிணை மனு கோரிக்கை இன்று (திங்கட்கிழமை) மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஹெய்யந்துடுவ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சீ.எஸ்.என் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயற்பட்ட நிஷாந்த ரணதுங்கவை தவிர்த்து ஏனைய நால்வருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரையும் தலா இரு இலட்சம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த பிணை அனுமதியானது, யோஷிதவின் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் கடுவலை நீதிமன்றிற்கு தொலைநகல் மூலம் உடனடியாக அறிவிக்கப்பட்டு, சந்தேகநபர்களை விடுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில், யோஷித உள்ளிட்ட ஐவர் கடந்த ஜனவரி மாதம் 30ஆம் திகதி பொலிஸ் நிதிக்குற்ற தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த கைதைத் தொடர்ந்து, கடற்படையின் லெப்டினன்ட் தர அதிகாரியான யோஷிதவை, கடற்படை தற்காலிகமாக பணிநீக்கம் செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.








