பொன்சேகாவை எச்சரிக்கிறார் மஹிந்த
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக இருந்தபோது தனிப்பட்ட ரீதியில் செய்த தவறுகள் தொடர்பான பதிவுகள் தம்மிடம் உள்ளதாகவும், அதனை வெளியிட்டால் பொன்சேகா மீதுள்ள சிறிது மரியாதையும் இல்லாமல் பொய்விடுமெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றில் சரத் பொன்சேகா வெளியிட்ட விடயங்களுக்கு பதலளிக்கும் வகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் உயிரிழந்த பின்னரே தாம் யுத்த வெற்றியை அறிவித்ததாக தெரிவித்துள்ள மஹிந்த, தம்மை பழிவாங்குவதற்காக பிரபாரனை உயிர்ப்பித்து கொண்டுவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லையென குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ தளபதி என்ற வகையில் யுத்தக் கட்டத்தில் பூரண ஒத்துழைப்புடன் சரத் பொன்சேகா செயற்பட்டதாக தெரிவிக்கும் மஹிந்த, ஆனாலும் யுத்த காலம் தொடர்பில் பொன்சேகா வெளியிட்ட தகவல்களை ஏற்றுக்கொள்ள முடியாதென குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகா இராணுவத்தின் ஒரு அதிகாரியே தவிர, அவர் பல இரகசியங்களை அறிந்திருக்கவில்லையென்றும் யுத்தம் முடிவுக்கு வந்த காலம், பிரபாகரன் கொல்லப்பட்டாரா இல்லையா என்ற விடயம் என்பன தமக்கே தெரியுமென குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரன் உயிரிழக்கும்போது சரத் பொன்சேகா இராணுவத்தினருடன் இருக்கவில்லையென தெரிவிக்கும் மஹிந்த, அவ்வாறு இருக்கையில் எவ்வாறு அவர் கூறுவதை நம்பமுடியுமென கேள்வியெழுப்பியுள்ளார்.
அரசியல் ரீதியில் தோல்வியடைந்த பொன்சேகாவுக்கு ஐக்கிய தேசிய கட்சி வாழ்க்கை கொடுத்துள்ளதால், தற்போது அவர்களுடன் இணைந்து பழிவாங்கல் நடவடிக்கைக்கு துணைபோவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேவேளை, சுனாமி உதவி நிதி நிறுவனம் என்ற பெயரில் புலிகளுக்கு பணம் கொடுத்ததாக வெளியாகும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யான தகவல் என்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தற்போதைய அரசாங்கம் தம்மையும் தமது குடும்பத்தையும் பழிவாங்கும் அரசியலையே மேற்கொண்டு வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.








