Breaking News

செங்குந்தா கொலை வழக்கு - மூவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

யாழ்.செங்குந்தா இந்துக் கல்லூரி கிரிக்கட் மைதானத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு பிரேமன் என்ற மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மூவருக்க 15 வருட கால கடூழிய சிறைத்தண்டனையும் தலா பத்தாயிரம் ரூபா தண்டப்பணமும் விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

குறித்த கொலை வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றபோது இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு எதிரிகளில் முதலாம், இரண்டாம், ஏழாம் எதிரிகளான அருளானந்தம் சோபஸ், இராஜகுலேந்திரன் நிசாந்தன், உமாகாந்தன் கிரிகேசன் ஆகிய மூவருக்குமே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

தலைமறைவாகியுள்ள ஏழாம் எதிரியான உமாகாந்தன் கிரிகேசன் இல்லாமலேயே வழக்கு விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், சர்வதேச பொலிஸாரின் துணையுடன் இவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் செங்குந்தா விளையாட்டு மைதானத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற கிரிக்கட் விளையாட்டுப் போட்டியின் போது, கிறிஸ்தோபர் பிரேமன் என்ற 21 வயதான குறித்த கிரிக்கட் விளையாட்டு வீரர், கிரிக்கெட்டிற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அருளானந்தம் சோபஸ், இராஜகுலேந்திரன் நிசாந்தன், வீரையா ஜெயப்பிரகாஷ், ஜெயலத் எமில்டன், இராஜேஸ்வரன் சப்தஸ்வரன், அமிர்தலிங்கம் விதன், உமாகாந்தன் கிரிகேசன் ஆகிய 7 எதிரிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் யாழ்.மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. எனினும் கொலையுடன் மூவரே நேரடியாக தொடர்புபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்தே மூவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டில் ஈடுபடுகின்ற ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் விளையாட்டு சம்பந்தமான தரமான மனப்பான்மை இருக்க வேண்டுமென குறிப்பிட்ட நீதவான் இளஞ்செழியன், இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையவேண்டுமென தீர்ப்பினை அடுத்து குறிப்பிட்டார்.