தமிழினியின் கணவரை கைது செய்ய பொலிசார் திட்டம்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணிப் பொறுப்பாளர் தமிழினியின் கணவர் ஜெயக்குமார் இன்று மாலைக்குள் பொலிசாரினால் கைது செய்யப்படவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
முன்னாள் போராளியான தமிழினி புற்றுநோயால் உயிரிழப்பதற்கு முன்னர் தனது விடுதலைப் போர் அனுபவங்களை கணவர் ஜெயக்குமாரின் உதவியுடன் நூலாகத் தொகுத்திருந்தார்.
குறித்த புத்தகம் இம்மாதம் 19ம் திகதி கிளிநொச்சியில் வெளியிடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஜெயக்குமார் தற்போது மேற்கொண்டுள்ளார்.குறித்த நூல் வெளியீடு தொடர்பாக கிளிநொச்சி பொலிசாரிடம் அனுமதி கோரி ஜெயக்குமார் விண்ணப்பித்திருந்த நிலையில் அவருக்கு இதுவரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நூலின் அட்டையில் தமிழினி விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் புலிக்கொடியுடன் இருப்பதன் காரணமாகவே நூல் வெளியீட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டு;ளளது.
அட்டையில் புலிகளின் சீருடை அணிந்து புலிக் கொடிக்குப் பக்கத்தில் தமிழினி இருக்கும் புகைப்படத்தை அகற்றினால் மட்டுமே நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு அனுமதி வழங்க முடியும் என்றும் பொலிசார் அறிவித்துள்ளனர்.
எனினும் குறித்த நூல் சர்வதேச புத்தகப் பட்டியல் இலக்கத் தொடர் (ஐஎஸ்பிஎன்) இலக்கம் பெற்று சட்டபூர்வமாக அச்சிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிங்கள ஊடகம் ஒன்று கிளிநொச்சி பொலிசாரிடம் வினவிய போது நூல் அட்டைப் படம் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாகவும், சட்டமா அதிபர் திணைக்களம் இதுவரை எதுவித பதிலும் அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே விடுதலைப் புலிகளின் சீருடையுடன் தமிழினி இருக்கும் புகைப்படத்தை அட்டைப்படத்தில் போட்டு நூலொன்றைப் பிரசுரித்த காரணத்திற்காக இன்று மாலைக்குள் தமிழினியின் கணவர் ஜெயக்குமாரை கைது செய்யவும் கிளிநொச்சி பொலிசார் திட்டமிட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.