ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் செயற்பாட்டால் நல்லிணக்கம் சீர்குலையும் - மஹிந்த
தனிப்பட்ட அரசியல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் மக்களிடையே காணப்படும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாக திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க குற்றம் சுமத்தினார்.
களுத்துறையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த மக்கள் சந்திப்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
“நேற்று முன்தினம் கொழும்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கூட்டமானது வெறுமனே அரசியல் சுயதேவைக்காகவே முன்னெடுக்கப்பட்ட ஒன்றாகும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் கடந்த பொது தேர்தல்களில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்ற சிலர் இன்று தனிப்பட்ட அரசியல் சுயநலன் தேவைக்காக தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை சீர்குலைப்பதோடு மக்களிடம் அடிப்படையற்ற சில விடயங்களை பரப்பி வருகின்றனர்.
தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய செயற்படும் இவர்கள் நாட்டிற்கும் மக்களுக்கும் எவ்வித நன்மை பயர்க்கும் செயற்பாடுகளையும் முன்னெடுத்ததும் இல்லை. இனிவரும் காலங்களில் முன்னெடுக்கப்போவதும் இல்லை.
இவர்களினால் முன்னெடுக்கப்படும் கூட்டங்களுக்கு மக்களை திரட்டுவதற்கு நாடளாவிய ரீதியில் சென்று மக்களிடம் தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் உண்மைக்கு புறம்பான கருத்துகளை தெரிவித்து இனவாதங்களையும் பரப்பி வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளினால் இன்று எமது நாட்டில் மூவின மக்களிடையே காணப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் சீர்குலையும்.
இவர்களின் செயற்பாடுகள் அனைத்தும் மக்களின் நலன்களை கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் அல்ல. முற்று முழுவதுமாக சுயநல தேவைக்காக முன்னெடுக்கப்படுகின்றது. இதனை மக்கள் நன்கு புரிந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்” என்றும் கூறினார்.