வலி.வடக்கு போராட்டத்தை கைவிடத் தீர்மானம்
சொந்த இடங்களில் தம்மை மீளக்குடியமர்த்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு மக்கள் ஆரம்பித்த சுழற்சிமுறை உண்ணாவிரதப்போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்குள் தம்மை மீள்குடியேற்றுவதாக ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழிக்கு அமைய உண்ணாவிரதப் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடத் தீர்மானித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டம் சுழற்சி முறையாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
தமது சொந்த நிலங்களில் விரைவில் தம்மை மீள்குடியமர்த்துமாறும், பலாலி விமான நிலையத்தை விஸ்தரிக்கக்கூடாதென்றும் கோரிக்கைகளை முன்வைத்து 24 நலன்புரி முகாம்களைச் சேர்ந்த மக்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு பகுதிகளில் 26 வருடங்களுக்கு மேலாக தமது சொந்த நிலங்களையும் சொந்தத் தொழிலையும் கைவிட்டு நலன்புரி முகாம்களில் வாழ்வதால் தாம் பெரும் துன்பங்களுக்குள்ளாகி வருவதாக மக்கள் தெரிவித்தனர்.