போரின் நெருப்பில் சிரிப்பை இழந்த மழலை!
2009ம் ஆண்டு 3ம் மாத காலப்பகுதியில் தமிழின அழிப்பின் மிக உச்சக்கட்ட நடவடிக்கைகள் புதுமாத்தளன் பகுதிகளில் நடந்து கொண்டிருந்தது.
அத் தருணத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் துடிதுடித்து இறந்து கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக குழந்தைகள் மிக கொடுரமாக அங்கவீனமாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
முல்லைத்தீவு உடுப்புக்குள கிராமத்தை சேர்ந்த லயனர் இரட்னராசா – ஜீவனா (வயது 11) என்னும் சிறுமி குறித்த படுகொலை நடவடிக்கையில் சிக்கி போர்க்காயங்களுடன் ஊனமாக்கப்பட்டு மீண்டுள்ளார்.
2009ம் ஆண்டு ஜீவனாவின் தந்தை தனது குடும்பத்தை யுத்தத்திலிருந்து பாதுகாக்க பதுங்குகுழி ஒன்றை அமைத்து கொடுத்துவிட்டு சிறியவேலை ஒன்றிற்காக வெளியே சென்று வீடு திரும்பிய வேளை இராணுவத்தினரின் அகோர எறிகணைத் தாக்குதலில் சிக்கி அவ்விடத்திலே மரணித்தார்.
பதுங்குகுழியில் இருந்த மழலை ஜீவனா அப்பாவிற்கு என்னாச்சு என்று பார்ப்பதற்கு ஒரு அடி எடுத்து வெளியே வருகையில். மறுபடியும் விழுந்த எறிகணைகள் வெடித்ததில் அவளின் இடதுகால் துண்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் 2009-03-27ம் திகதி நடந்ததாகவும் அதில் தனது கணவரும் தந்தையும் இறந்துள்ளதாக ஜீவிதாவின் தாயார் ல.சுபத்திரா (வயது 44) குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் குறிப்பிடுகையில், ஏழுவருடங்கள் ஆகியும் எமக்கு எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை எம்மை யாரும் வந்து பார்க்கவுமில்லை.
ஆனால் நாங்கள் பாதிப்படைந்து இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அடிக்கடி பத்திரிகைகளில் வெளிவந்ததாகவும், அரசியல் கட்சிகள், பனர் அடித்து ஆர்ப்பாட்டங்கள் செய்ததாகவும் தற்பொழுது பிள்ளைகளின் படிப்பு செலவிற்கும் வறுமைக்கும் ஜீவனாவின் ஆசிரியை ஆகப்போகும் கனவிற்கும் தான் என்ன செய்வது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.