பிரபாகரன் எவ்வாறு கொல்லப்பட்டார் பொட்டு அம்மானுக்கு என்ன நடந்தது?
உண்மையில் பிரபாகரன் எவ்வாறு கொல்லப்பட்டார். பொட்டு அம்மான் எங்கே, லசந்த கொலையின் பின்னணி என்ன இந்த விவகாரங்களின் பின்னணியில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளாரா, வேறு எவரும் இந்த குற்றங்களின் பின்னணியில் உள்ளனரா என்பது தொடர்பில் உடனடியாக உள்ளக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.
விசாரணைகளை சுயாதீனமாக மேற்கொண்டு அதன் மூலம் உண்மைகளை கண்டறியும் பட்சத்தில் மட்டுமே இவர்களின் கருத்தின் உண்மை நிலைமைகளை கண்டறிய முடியும். அதை தவிர்த்து காலத்தை கடத்தி இவ்வாறான கருத்துகளை முன்வைத்து வந்தால் அதுவே சர்வதேச தரப்பினருக்கு மிகப்பெரிய வாய்ப்பாகவும் அமையும் எனவும் அக்கட்சி குறிப்பிட்டது.
இறுதி யுத்தம் தொடர்பிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்களின் இறுதிக்கட்ட செயற்பாடுகள் தொடர்பிலும் முன்னாள்
இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துவரும் கருத்துகள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் கருத்தினை ஊடகம் ஒன்று வினாவியபோதே கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கடந்த சில காலமாகவே அமைச்சர் சரத் பொன்சேகா இறுதி யுத்தம் தொடர்பில் பல மாறுபட்ட கருத்துகளை முன்வைத்து வருகின்றார். பாராளுமன்றத்திலும் ஏனைய பொது இடங்களிலும் ஊடக சந்திப்புகளிலும் அவர் இந்த விடயங்கள் தொடர்பில் கருத்துகளை முன்வைத்து வருகின்றார். எவ்வாறு இருப்பினும் அவரது இந்த கருத்துகள் தொடர்பில் உண்மை என்ன, இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்ற விவகாரங்கள் எவையும் எமக்குத் தெரியாது. யுத்தம் ஒன்று நடந்தது, இதில் இரு தரப்புகளும் மோதிக்கொண்டன. இறுதியில் பயங்கரவாத பிடியில் இருந்து இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் எமது இராணுவம் மீட்டெடுத்தது என்ற காரணி மட்டுமே எமக்குத் தெரியும். இந்த யுத்தத்தை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்னெடுத்து சென்றார் என்று தெரியும்.
அவ்வாறு இருக்கையில் இப்போது சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகள் மாறுபட்ட வகையில் அமைந்துள்ளன.லசந்த விக்கிரமதுங்க, பொட்டு அம்மான், பிரபாகரன் தொடர்பில் இதுவரையில் எவரும் கூறாது கதைகளை இப்போது சரத் பொன்சேகா கூறுவது ஆச்சரியமாக உள்ளது. ஆனால் உண்மையா என்பதில் சந்தேகம் உள்ளது. அதேபோல் இறுதி யுத்தத்தின் இறுதி சில நாட்களில் நடந்ததாக கூறப்படும் தவறான செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராய வேண்டிய தேவை உள்ளது.
ஆகவே ஒருவருக்கு ஒருவர் குற்றம் சுமத்திக்கொண்டு மேடைகளில் கூச்சலிடுவதை விடவும் இந்த விடயங்கள் தொடர்பில் உடனடியாக உள்ளக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். உண்மையில் பிரபாகரன் எவ்வாறு கொல்லப்பட்டார். பொட்டு அம்மான் எங்கே, லசந்த கொலையின் பின்னணி என்ன. அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய உண்மையில் இந்த சம்பவங்களின் பின்னணியில் உள்ளாரா, வேறு எவரும் இந்த குற்றங்களின் பின்னணியில் உள்ளனரா என்பது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
விசாரணைகளை சுயாதீனமாக மேற்கொண்டு அதன் மூலம் உண்மைகளை கண்டறியும் பட்சத்தில் மட்டுமே இவர்களின் கருத்தின் உண்மை நிலைமைகளை கண்டறிய முடியும். அதை தவிர்த்து காலத்தை கடத்தி இவ்வாறன கருத்துகளை முன்வைத்து வந்தால் அதுவே சர்வதேச தரப்பினருக்கு மிகப்பெரிய வாய்ப்பாகவும் அமையும். ஆகவே அரசாங்கம் இவர்களின் கருத்துகளை வேடிக்கைபார்த்துக்கொண்டு இருக்காமல் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெற்ற எதிரணியின் கூட்டம் நாட்டை பிரிக்கும் ஒரு நடவடிக்கை என நாம் கருத்துகின்றோம்.
இதில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் தொடர்பில் எம்மத்தியில் எந்த கருத்துகளும் இல்லை. ஆனால் இந்த செயற்பாடுகள் உண்மையில் அரசாங்கதிற்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்றார்.