குழப்புகின்றார் மஹிந்த!
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பிளவுகள் இல்லை. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் காலத்தில் கட்சியை குழப்பிய அதே அணுகுமுறையை மஹிந்த ராஜபக்ஷ தற்போதும் முன்னெடுத்து வருகின்றார். எக்காரணம் கொண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த இடமளிக்க முடியாது.
நேற்று முன்தினம் நடத்தப்பட்ட கூட்டத்திற்கு நாம் அஞ்சமாட் டோம். அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் மஹிந்த ராஜபக் ஷவின் நீண்ட நாள் கனவு ஒருபோதும் பலிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மினுவாங்கொடை பிரதேசத்தில் மின்நிலையமொன்றுக்கு அடிக்கல் நாட்டிவைக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள்ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அங்கு மேலும் உரையாற்றுகையில்;
மினுவாங்கொடை பிரதேசத்தில் வர்த்தக மத்திய நிலையம் உள்ளமையினால் மீதமான மரக்கறிவகைகள் உள்ளிட்ட குப்பைகளினால் மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டே 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியின் போது சேதன பசளையை கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யும்
திட்டத்தை நான் ஆரம்பித்து வைத்திருந்தேன். எனினும் இந்த வேலைத்திட்டத்திற்கு பிரதேச மக்களினால் பெரும் எதிர்ப்பு வெளியிடப்பட்டன. இதன்காரணமாக இந்த வேலைத்திட்டம் கைவிடப்பட்டது.
இது தொடர்பில் தவறாக புரிந்துணர்வுடன் மக்கள் செயற்படுவதே இவ்வாறான எதிர்ப்புகள் கிளம்புவதற்கு பிரதான காரணமாகும். இவ்வாறான செயற்பாடு மக்களின் நலனுக்காகவே முன்னெடுக்கப்படுகின்றன. ஆகையால் குப்பைகளை சேகரித்து மின்சாரம் உற்பத்தி செய்வதனால் பல்வேறு நலன்களை பெற்றுக்கொள்ள முடியும். எனினும் இந்த திட்டத்தை முறியடிப்பதற்கு சிலர் சதி திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இத்தகைய சதிகளுக்கு மக்கள் உள்ளாக கூடாது.
தற்போது ஊழல் மோசடிகள் இல்லாத நாட்டை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். முன்னைய ஆட்சியின் போது அபிவிருத்தி என்ற பேரில் கடன்களை பெற்று மோசடி செய்தமையினால் தற்போது இலங்கை பொருளாதார ரீதியாக பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனாலும் தற்போது பொருளாதாரம் தொடர்பில் பெரும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
நல்லாட்சியின் கீழ் அனைத்து இனத்தவர்களிடம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நல்ல வளமான நாட்டை நாம் பெற்றுக்கொடுப்போம். இதனை மையமாக கொண்டே இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளது. இருந்தாலும் தேசிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு எதிராக சதி திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன்படி ஸ்ரீ சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்துவதற்கு முனைகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடு ஆரம்பத்திலிருந்து அவ்வாறே காணப்பட்டது. முன்னாள் பிரதமரும் எனது தாயாருமான சிறிமாவோ பண்டாரநாயக்க கட்சியின் தலைவியாக செயற்படும் வேளையில் கட்சியை இரண்டாக பிளவுபடுத்துவதற்கு பெரும் முயற்சிகளை கூட்டாக முன்னெடுத்திருந்தார். அதுபோலவே கட்சி தலைவிக்கு எதிராக பல்வேறு மட்டத்தில் கூட்டங்களை நடத்தியிருந்தார்.
இந்நிலையில் தற்போதைக்கு சுதந்திரக் கட்சியில் எந்தவொரு பிளவுகளும் கிடையாது. பிளவுபட்டிருப்பதாக காண்பிக்கின்றனர். ஆனாலும் முன்னைய அணுகுமுறையையே தற்போது மஹிந்த ராஜபக்ஷ கையாண்டு வருகின்றார். எனினும் முன்னைய காலங்களில் சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் திட்டங்கள் வெற்றியளிக்கவில்லை. அதேபோன்று தற்போது மஹிந்த ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு திட்டமும் வெற்றியளிக்க போவதில்லை. இதன்படி நேற்று முன் தினம் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கண்டுகொள்ள வேண்டியதில்லை. இது மஹிந்த ராஜபக்ஷவிற்கு பழகிப்போன செயலாகும். இதனை அலட்டிக்கொள்ள தேவையில்லை என்றார்.