Breaking News

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அனுர கேள்வி


வடபகுதியிலுள்ள தமிழ் மக்களிடமிருந்து தங்க நகைகளை மீட்பதற்காகவா இராணுவம் இறுதிக்கட்ட யுத்ததில் ஈடுபட்டது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.இறுதிக்கட்ட யுத்ததில் தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவம் வெற்றி கொண்டதன் பின்னர் 40 கிலோ கிராம் தங்கத்தை மீட்டது.

ஆனால் அவ்வாறு மீட்கப்பட்ட தங்க நகைகள் எதற்காக எங்கே வைக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பில் இதவரை தகவல்கள் கிடைக்கப்பெறவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன்போது குறுக்கிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயசிங்க இராணுவத்தினரால் மீட்க்பட்ட தங்க நகைகள் தொடர்பில் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரம சிங்க, வடக்கிலிருந்து 150 கிலோ கிராம் தங்க நகைகளை இராணுவம் கைப்பற்றியது.அதில் 32 கிலோ கிராம் தங்கம் மாத்திரம் மத்திய வங்கியிடம் கையளிக்கப்பட்டதுடன் 80 கிலோ கிராம் தங்கம் இராணுவத்திடமுள்ளதாக குறிப்பிட்டார்.

அந்த தங்கத்தின் பெறுமதி 131 மில்லியன் ரூபா எனவும் கடந்த 2010 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 7 ஆம் திகதி முதல் 2012 ஆம் ஆண்டு வரை 2222 பேரினால் அடகு வைக்கப்பட்டிருந்த வளையல்கள், மற்றும் தாலிகள் கையளிக்கப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார்.

எனினும் இந்த தகவல்கள் உறுதிசெய்யப்படவில்லையென பிரதமர் ரணில் விக்ரம சிங்க மேலும் தெரிவித்தார்.இதன்போது குறுக்கிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, 150 கிலோ கிராம் தங்கத்தில் 32 கிலோ கிராம் தங்கம் மத்திய வங்கியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 80 கிலோ கிராம் தங்கம் இராணுவத்தினரிடம் இருந்தால் ஏனைய 40 கிலோ கிராம் தங்கத்திற்கு என்ன நடந்தது எனவும் கேள்வியெழுப்பினார்.இதற்கு பதிலளித்த பிரதமர், தங்க நகைள் தொடர்பில் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது. எனினும் அந்த அறிக்கைகள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்குகின்றன.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் முழுமையான தகவல்கள் வெளியாக கால அவகாசம் தேவையென குறிப்பிட்டார்.