துணுக்காய் கல்வி வலயப் பணிப்பாளரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவு - துணுக்காய் கல்வி வலயப் பணிப்பாளர் மாலினி வெலிங்ரனை இடமாற்றக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இன்று புதன்கிழமை காலை, துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட 62 பாடசாலைகளைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வடமாகாண கல்வி அமைச்சின் முன்னால் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.துணுக்காய் கல்வி வலயப் பணிப்பாளர் மாலினியின் அதிகார துஸ்பிரயோகம், நிதி ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களுக்கான விசாரணை அறிக்கையை துரிதப்படுத்தக் கோரியும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
2013ஆம் ஆண்டு துணுக்காய் கல்வி வலயப் பணிப்பாளருக்கு எதிராக அதிகார துஸ்பிரயோகம், நிதி ஊழல் மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த போதும், இதுவரை தீர்வுகள் கிடைக்கவில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதுவரை அவருக்கு எதிராக எந்தவொரு விசாரணை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.கல்வி வலயப் பணிப்பாளரை இடமாற்றக் கோரி மகஜர் ஒன்றையும் கல்வி அமைச்சர், வடமாகாண முதலமைச்சர் மற்றும் வடமாகாண ஆளுநருக்கு கையளிக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
செய்யாதே செய்யாதே கல்வி அமைச்சே ஆசிரியர் எமக்கு துரோகம் செய்யாதே, வலய வாரியம் வேண்டும் மாலினி வாரியம் வேண்டாம், துடிக்காதே துடிக்காதே பழி வேண்டத் துடிக்காதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.