அரசுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் -மஹிந்த அணி கோரிக்கை
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுவதற்கு யாரிடமும் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டிய அவசிய மில்லை. எனவே திட்டமிட்டப்படி வியாழக்கிழமை நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் இடம்பெறும். இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ளார் என்று கூட்டு எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்கு தாய் நாட்டில் இடமளிக்க முடியாது. விடுதலை புலிகள் இருந்த காலத்தை விட தற்போது தான் மிகவும் ஆபத்தான நிலை இலங்கையில் காணப்படுகின்றது. எனவே இந்த போராட்டம் அரசியல் சார்ந்ததல்ல. மாறாக தாய் நாட்டை மீட்டெடுப்பதற்கான மற்றுமொரு போராட்டமாகும். இதில் பேதங்களை மறந்து அனைத்து இன மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூட்டு எதிர்க் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறுகையில் ,
நல்லாட்சி என்ற போர்வையில் ஜனநாயக விரோத ஆட்சியை முன்னெடுக்கும் தற்போதைய அரசாங்கத்தின் வேஷம் கலைந்து விட்டது. பொது மக்களுக்கு வெளிப்படுத்திய திட்டங்கள் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளன . ஊடகங்களுக்கு சுததந்திரமாக செயற்பட முடியவில்லை. மக்களுக்கு பொருளாதார ரீதியில் பல்வேறு நெருக்கடிகள் காணப்படுகின்றன. இந்த நிலையில் அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு விஷேட வசதி வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கு பிரேராணை கொண்டு வர முற்படுகின்றது . இதற்கு கூட்டு எதிர் கட்சி ஒரு போதும் ஆதரவு வழங்காது. சபாநாயகர் இந்த விடயத்தில் உண்மைக்கு முரணான வகையில் செயற்படுகின்றார்.
ஆகவே கூட்டு எதிர் கட்சியின் அரச எதிர்ப்பு போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். எந்தவொரு அரசியல் சிந்தனைகளுக்குள்ளும் உட்படாது நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும் என்றார்.
செய்தியாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும குறிப்பிடுகையில்
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை வியாழக்கிழமை முன்னெடுப்பதற்கு பிரதானமாக 5 விடயங்களே உள்ளன. அதாவது இந்தியாவிற்கு அடிபணிந்து எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திடுகின்றமை , விவசாயிகளுக்கான நிவாரண குறைப்பு , ஊடக அடக்குமுறை , தேர்தலை நடத்தாமை மற்றும் இராணுவத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் என்பனவே அரச எதிர்ப்பு பேரணிக்கு காரணங்களாகும். இதில் கூட்டு எதிர்க் கட்சியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 41 பேரில் 39 பேர் உறுதியாகவே கலந்துக் கொள்வார்கள். ஏனைய இருவரும் அத்தியாவசிய தேவை நிமித்தம் வெளிநாட்டிற்கு செல்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ள இந்த எதிர்ப்பு பேரணியில் சோமவன்ச அமரசிங்க உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் , இடதுசாரி கட்சிகள் மற்றும் அமைப்புகள் என பல தரப்பட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே அனைத்து இன மக்களும் கட்சி பேதங்களை மறந்து இதில் கலந்து கொள்ள வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 1951 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட போது பிரதான நோக்கமாக ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பே காணப்பட்டது. அந்த கொள்கையை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றோம் . கூட்டு அரசாங்கத்தில் உள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்கள் ஒரு கட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை விட்டு வெளியேறி விடுவார்கள் என நினைத்தோம். ஆனால் அவர்கள் வெளியேறவில்லை.
இலங்கைக்கு பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதில் கூட மௌனமாகவே உள்ளனர். ஆகவே பொறுமைகாகக்க முடியாது. போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். 9க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் எம்முடன் இணைந்துள்ளன . வியாழக்கிழமை இடம்பெறவுள்ள மாபெரும் போராட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்கு எதிரான ஒன்றாகும். . அதற்கு அணிதிரள யாரிடமும் அனுமதி கோர வேண்டியதில்லை என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிடுகையில்
பொது மக்களுக்கு 24 மணித்தியாலம் மின்சாரத்தை வழங்க முடியாத அரசாங்கமே நல்லாட்சி அராசங்கமாகும்.
பாரிய நிதி நெருக்கடியை நாட்டில் ஏற்படுத்தி மக்கள் மீது பொருளாதார நெருக்கடிகளை தோற்று வித்துள்ளது. எனவே இந்த அரசாங்கம் தோல்வியடைந்த அரசாங்கமாகும். விடுதலை புலிகள் இருந்த காலக்கட்டத்தில் கூட அவ்வாறான நெருக்கடிகள் நாட்டில் காணப்பட வில்லை. இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தேவைக்கு ஏற்ப இலங்கையை தயார்படுத்த இடமளிக்க முடியாது. வியாழக்கிழமை இடம்பெறவுள்ள போராட்டம் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் முதலாது கட்டமாகும். இதில் அனைத்து இன மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.








