Breaking News

வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைப்பதே முறையானது - வடக்கு முதல்வர்

நாட்டில் யுத்தம் நிறைவடைந்து ஆறாண்டுகள் கடந்துள்ள நிலையில், வடக்கு மக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இராணுவத்தினரை படிப்படியாக குறைப்பதே முறையானது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் புதிய உயர்ஸ்தானிகராகப் பதவியேற்றிருக்கும் பிரைஸ்ஸி ஜோன் ஹட்டக்சன் நேற்று (வியாழக்கிழமை) வடமாகாண முதலமைச்சரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் முதலமைச்சர் உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைந்துள்ள நல்லாட்சி அரசாங்கம் வாக்குறுதியளித்ததற்கமைய வடக்கு மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்து வருகின்றது. ஆனால் வடக்கில் தொடர்ந்தும் இராணுவத்தினரை நிலைநிறுத்தியுள்ளமையானது மக்களுக்கு பாரிய பிரச்சினையாக விளங்குகிறது என முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய இது தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதாக உறுதியளித்த உயர்ஸ்தானிகர், வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க உதவிகளை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

மேலும் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை வடமாகாண சபையுடன் இணைந்து செய்ய விரும்புவதாகவும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.

வடமாகாணத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் உதவிகள் மற்றும் எதிர்காலத்தில் வழங்க வேண்டிய உதவித்திட்டங்கள் குறித்து ஆராயும் வகையில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் இவ்வடக்கு விஜயம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.