இராணுவச் சிப்பாயை காட்டுக்குள் உதைத்துக் கொன்றார் கோத்தா – பொன்சேகா குற்றச்சாட்டு
கோத்தாபய ராஜபக்ச இராணுவத்தில் பணியாற்றிய போது, இராணுவச் சிப்பாய் ஒருவரின் மரணத்துக்கு காரணமாக இருந்தார் என்று குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார் இலங்கையின் அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இது தொடர்பான தகவல்கள் வெளியிட்டார்.“கோத்தாபய ராஜபக்ச கஜபா ரெஜிமென்ட்டில் பணியாற்றிய போது இந்தச் சம்பவம் இடம்பெற்றது. அவர் இராணுவத்தினரின் ஒரு குழுவுடன்காட்டுக்குள் சென்றிருந்தார். ஆனால் அது இராணுவ நடவடிக்கைக்காக அல்ல.
காட்டுக்குள் இருந்த போது ஒரு இராணுவச் சிப்பாய் தனக்கு நெஞ்சுவலிப்பதாக கூறினார். அவரை தரையில் இழுத்து வருமாறு கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டார்.இழுத்து வந்தபோது, காலால் உதைத்தார் கோத்தாபய ராஜபக்ச. இறுதியில் அந்தச் சிப்பாய் இறந்து போனார். அது ஏனைய படையினருக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் கோத்தாபய ராஜபக்சவைத் தாக்கினர்.
கோத்தாபய ராஜபக்ச செய்த தவறுகளுக்கு ஆதாரங்கள் உள்ளன. நான் தவறு செய்திருந்தால் அதனை கோத்தாபய ராஜபக்ச நிரூபிக்க வேண்டும்” என்றும் சரத் பொன்சேகா சவால் விடுத்துள்ளார்.