இலங்கையில் மீண்டும் சோதனைச் சாவடிகள் - அச்சத்தில் மக்கள்
இலங்கையில் மீண்டும் யுத்தக்காலத்தைப் போன்று குழு மோதல்கள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை இடைமறித்து சோதனையிடும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தலைநகர பொலிஸார் மீண்டும் ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதோடு, இது கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற மோதலை நினைவுபடுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளன.
கொழும்பில் கடந்த சில மாதங்களாக நிலவும் குழு மோதல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களே இதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த புறநகர் பகுதிகளில் 100ற்கும் மேற்பட்ட சோதைனைச் சாவடிகளை நிறுவதற்கு எதிர்ப்பார்ப்பதாகவும், கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு நிறைவடைந்த யுத்தத்தின்போது இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாரிய குற்றங்களைத் தடுக்க சட்டத்தை கடுமையாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல்கள் அசாதாரணமாக அதிகரித்தமையே அதிகாரிகள் சட்டத்தை கடுமையாக்குவதற்கு காரணமாக அமைந்ததாகவும் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.கடந்த வாரம் மாத்திரம் கொழும்பில் இடம்பெற்ற குழுக்களுக்கிடையிலான துப்பாக்கிச் சூடு மற்றும் மோதல்களால் மூவர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலைக்கு தனது கணவனை பார்வையிடச் சென்ற பெண் மீது நேற்று முன்தினம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதோடு, கடந்த வாரம் தெமட்டகொட பிரதேசத்திலும் சிறைச்சாலை வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் 10 விசேட பொலிஸ் குழுக்கள் இது குறித்த விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஆங்காங்கே சோதனைச் சாவடிகளை அமைத்து வாகனங்கள் மற்றும் பிரஜைகளை வழிமறித்து விசாரணை செய்யும் பொலிஸாரின் நடவடிக்கைகள் கடந்த 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த சிவில் யுத்தத்துடன் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








