Breaking News

டக்ளஸ் நீலிக்கண்ணீர் வடிப்பதாக பரஞ்சோதி குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான டக்லஸ் தேவானந்தா நீலிக்கண்ணீர் வடிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி குற்றம் சுமத்தியுள்ளார்.

இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தம்மை, தங்களது சொந்த காணிகளில் மீள்குடியமர்த்துமாறு கோரி இடம்பெயர்ந்துள்ள மக்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘யுத்தத்தின் நிறைவில் இராணுவத்தினரால் கையக்கப்படுத்தப்பட்ட மக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நநிலையில் இடம்பெயர்ந்துள்ள தம்மை, தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு கோரி வலிவடக்கு, வலளாய், அச்சுவேலி, வலிகிழக்கு மக்களும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் அவர்களின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு பூரணமாக ஒத்துழைப்புகளை வழங்குவோம்.

இவ்வாறானதொரு சூழலில் மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் மக்களை துன்புறுத்திய முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான டக்லஸ் தேவானந்தா நீலிக்கண்ணீர் வடித்து வருகின்றார்.

அவர் மஹிந்தவின் ஆட்சியில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்தவர். அப்போது தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் குறித்து சிந்திப்பது வியப்பளிக்கின்றது’ எனவும் தெரிவித்துள்ளார்.