சர்வதேச மகளிர் தினம் இன்று, தேசிய நிகழ்வு அம்பாறையில்
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. சர்வதேச நாடுகள் பலவற்றில் இன்றைய நாள் பொது விடுமுறை தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வருடா வருடம் இந்த மார்ச் 8 ஆம் திகதியை ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மகளிர் தினமாக பிரகடனப்படுத்தி, கொண்டாடி வருகின்றது.
“சக்தியுள்ள பெண்-பிரகாசமான நாளை” எனும் தலைப்பில் இம்முறை மகளிர் தின தேசிய நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (8) அம்பாறை வீரசிங்க விளையாட்டு மைதானத்தில் இடம்பெறுகின்றது.
பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் கடந்த 1848 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி ஒப்புதல் அளித்தான். கடுமையான போராட்டத்துக்கு மத்தியில் இந்த உரிமையை அந்நாட்டு பெண்கள் பெற்றுக் கொண்டனர்.
அந்த நாளை நினைவு கூறும் முகமாகவே பிரதி வருடமும் மார்ச் 8 ஆம் நாள் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.








