Breaking News

யாழில் அரச அதிகாரிகளும் பாலியல் லஞ்சம் கோருகின்றனர்: சந்திரிகா

வட மாகாணத்தில் கணவனை இழந்த இளம் பெண்களிடம் இராணுவம் மட்டுமன்றி தமிழ் அரச ஊழியர்களும் பாலியல் இலஞ்சம் கோருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் ஊடகவிலாளர்களை தெளிவூட்டும் செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நீண்டகாலமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணும் பொற்காலம் உதயமாகியுள்ளதாகவும், இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து செயற்படும் இந்த தருணத்தில் பல்வேறு குறைபாடுகள் ஏற்படலாம் என்றும் கூறினார்.

ஆனால் இன மத ரீதியில் கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரிவினை, முரண்பாடுகள் மீண்டும் ஏற்படாத வகையில் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே தமது இலக்கு என்றும் கூறினார்.

’30 வருடப் போரையும், புலிகளையும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தோற்கடித்த போதிலும் போராட்டம் ஏற்பட அடிப்படை காரணிகளாக இருந்த பிரச்சினையை தீர்ப்பதற்கும் அது சார்ந்த மக்களின் உரிமைகளை வழங்குவதற்கும் தவறியுள்ளது.

எனவே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற பொறுப்பு புதிய அரசாங்கத்திற்கு இருக்கின்ற காரணத்தால் அதற்கான செயலணி உருவாக்கப்பட்டது.

இதற்கான பணிகளை முன்னெடுக்க ஊடகங்களும் ஒத்துழைக்க வேண்டும். நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்க விரும்பம் தெரிவித்துள்ள புலம்பெயர் அமைப்புக்களிடம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அவர்களின் ஒத்துழைப்பும் எமக்கு அவசியம்’ என்றும் தெரிவித்தார்.