யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் போராட்டம்
யாழ் போதனா வைத்தியசாலை தாதியர்கள் இடண்டாவது நாளாகவும் இன்று சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற தாதியர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரனைக்கு என அழைத்து சென்று கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த இரு நாட்களுக்கு முன்னர் பார்வையாளர் நேரம் முடிந்ததன் பின்னர் உறவினர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை பார்க்க சென்ற போது கடமையிலிருந்த ஆண் தாதியர் ஒருவர் குறித்த உறவினரிடம் உங்களது நேரம் முடிந்து விட்டது ஆகவே நீங்கள் சென்றுவிட்டு மாலை வந்து பார்க்குமாறு கூறியுள்ளார்.
இந்நிலையில் தாதியது பேச்சை குறித்த நபர் கவனத்தில் எடுக்காமையை தொடர்ந்து இருவருக்குமிடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவத்தையடுத்து நோயாளரை பார்வையிட வந்த நபரால் யாழ் பொலிஸ் நிலையத்தில் தாதியர் தன்னை மிரட்டியதாகவும் தன்னை தாக்கியதாகவும் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து குறித்த தாதியரை பொலிஸார் விசாரனைக்கு என அழைத்து சென்று கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தியதாக அரச தாதியர் உத்தியோகத்தர் சங்க தலைவர் நற்குனராஜா தெரிவித்தார்.
இதன் பின்னர் குறித்த தாதியர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் உண்மையான குற்றவாளியை விடுத்து தவறு செய்யாதவரை பொலஸார் கைது செய்துள்ளனர்.இதனால் உண்மையான குற்றவாளியை கைது செய்யும் வரை தமது போராட்டம் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.