Breaking News

கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்கிறது - அறுவரின் நிலைமை கவலைக்கிடம்

மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 14 தமிழ் அரசியல் கைதிகள் இன்று புதன்கிழமை 16ஆவது நாளாகவும் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.உடல்நிலை பாதிக்கப்பட்ட கைதிகளில் அறுவரின் நிலை மேலும் மோசமடைந்த நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடேசன் குகநாதன், ந.தர்மராசா, முத்துசிவன் சிவநாதன், அகஸ்தின் ஞானசீலன், பாலசிங்கம் மனோதரன் மற்றும் சிவசுப்ரமணியம் தில்லைராஜ் ஆகியோருக்கே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பிலான விவாதம் இடம்பெற்றிருந்தது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இரா.சம்பந்தன் நீண்ட உரையாற்றியதோடு, சுமந்திரன் உள்ளிட்டவர்களும் உரையாற்றியிருந்தனர்.

எனினும் சபையில் கைதிகள் விடயத்துடன் தொடர்புடைய அமைச்சரோ, பிரதமரோ இருக்கவில்லை என்பதோடு அரசாங்கத் தரப்பிலிருந்து ஒருசில அமைச்சர்களிடமிருந்தும் எவ்வித ஆக்கபூர்வமான பதில்களும் கிடைக்கவில்லை.

இதேவேளை, நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் மூலம் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு குறிப்பிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், இது அரசாங்கத்தால் நிகழ்த்தப்படும் நாடகம் எனக் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.