தமிழ் மக்களுக்கு புதிய வருடத்தில் தீர்வு கிடைக்க வேண்டும்!- செல்வம்
தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக கோரிவரும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு, பிறக்கும் 'துர்முகி' ஆண்டில் முழுமையாகக் கிடைக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
வட கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் ஓர் அலகாக இணைக்கப்பட்டு அவர்களின் வரலாற்று வாழ்விடத்தில் அவர்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் தம்மைத் தாமே ஆளக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான ஓர் அரசியல் தீர்வு பிறக்கும் இப் புதிய வருடத்தில் கிடைக்க வேண்டும்.
கடந்த கால கசப்புணர்வுகள் காலவெள்ளத்தில் கரையுண்டு போய், மலரும் புதுவருடம் இலங்கையில் வாழும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களிடையே ஐக்கியத்தையும் சமாதானத்தையும் சுபீட்சத்தையும் கொண்டுவரும் என நம்புகிறேன்.
இப் புதுவருடத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.








