Breaking News

இந்தியக் கண்ணாடியால் காணும் இலங்கைத் தமிழர் போராட்டம்!

உலகத் தமிழினத் தலைவர் கலைஞர்’ என்ற கனவைத் கலைத்தற்காக கருணாநிதியும் தி.மு.க வும் பிரபாகரன் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் கொண்டிருந்த சினம் இன்னமும் ஆறவில்லை என்பதை தற்போதைய செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

கொடூர யுத்தத்தின் வலியிலிருந்து ஈழத் தமிழர்கள் மீள முடியாத தருணத்தில் யாழ்ப்பாணத்திற்குச் ‘சுற்றுப்பயணம்’ மேற்கொண்ட தி.மு.க எம்.பி டீ.ஆர் பாலு உங்களுக்கும் தலைவர் கலைஞர்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்’ என்று ‘அறிவுறுத்தினார்’. பிரபாகரன் என்ற பெயர் மீது தி.மு.க கொண்டிருந்த வெறுப்பு அந்த அறிவுறுத்தலில் தொனித்தது. பிரபாகரன் தொலைந்து போய் விட்டார்தானே இனிமேலாவது கலைஞரை உங்கள் தலைவராக ஏற்றால் என்ன என்று கேட்காமல் கேட்டார் டி.ஆர் பாலு

இலங்கை அரசியலும், இந்திய அரசியலும் வெவ்வேறானவை. ஒன்றுடன் ஒன்று ஒப்பிட முடியாதவை. பாணிகளும் வழிகளும் எதிர் எதிரானவை. இந்திய அரசியல் போலத்தான் இலங்கை அரசியலும் தமிழர் போராட்டங்களும் அமைந்திருக்கும் என்ற யூகங்களும் கற்பிதங்களும் முழுக்க முழுக்கத் தவறானவை. கருணாநிதியின் வாழ்க்கை திரைப்படமாகிறது என்ற செய்தி வெளியானதும் ‘ஒரு படத்தில் ஐந்து கதாநாயகிகளா?’ என்று இணையத்தில் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். 

தேர்தல் நடந்தால் முன்பக்கத்தில் ‘கருணாநிதியின் மனைவி வாக்களிக்கிறார்’ என்று ஒருவரின் படம் பிரசுரமாகும். உள்பக்கத்தில் ‘கருணாநிதியின் துணைவி வாக்களிக்கிறார்’ என்று வேறொருவரின் படம் வெளியாகும். இதெல்லாம் இந்தியப் பாணி. இந்திய வாக்காளர் இதனை ஏற்றுக்கொள்வார்கள். அது அவர்களது முடிவு. இத்தகைய தகுதிகள் இல்லாததாலோ என்னவோ வை.கோ போன்றவர்களைத் தமிழக வாக்காளர்கள் இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஈழத்தின் நிலைமை வேறு மாதிரி. அங்கு தனிநபர் ஒழுக்கம் பிரதானமாக நோக்கப்படும். ஜி.ஜி.பொன்னம்பலம், செல்வநாயகம் காலமாயினும் அதற்கு முந்திய பிந்திய காலங்களிலும் தலைமைக்கான தகுதிகளில் இதுவே தேவை. புலிகள் காலத்தில் அரசியல் ரீதியாக அமிர்தலிங்கம், டக்ளஸ் போன்றோருடன் முரண்பாடு இருந்தது. இந்த மாபெரும் யுத்தத்தை நடத்திய சிங்களமும் கூட புலிகளின் ஒழுக்கம் குறித்துக் கொச்சைப்படுத்தியதில்லை. அவ்வாறு செய்தால் சிங்களவர்கள் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று தெரிந்திருந்தது.

தமிழகத்தின் தலைமைக்கான கண்ணாடியைப் போட்டுப் பார்த்ததாலோ என்னவோ சிவகாமி ஐ.ஏ.எஸ். என்பவர் ‘போராட்டத்துக்காகச் சென்ற பெண்களைப் புலிகள் தமது பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்தினர்’ என்று கூறினார். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவரது கூற்றில் குளிர்ச்சியடைந்த கனிமொழியின் தந்தை இவருக்கு எதிர்வரும் தேர்தலில் தமது தலைமையிலான கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க சின்னமான உதயசூரியனில் போட்டியிட வாய்ப்புக் கொடுத்துள்ளார். இவரது கருத்தைக் கனிமொழியும் ஏற்றுக்கொண்டதாகத்தான் எண்ண வேண்டியுள்ளது. இல்லையேல் அவர் தமது ஆட்சேபனையைத் தெரிவித்திருப்பார்.

ஏற்கெனவே பார்வதியம்மாள் சென்னை விமான நிலையத்தில் வைத்துத் திருப்பியனுப்பப்பட்டார். இதன் மூலம் பிரபாகரன் மீதான வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்டார் கருணாநிதி. ஈழ விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பானவற்றையே பேசுவதை வழக்கமாகக் கொண்டவர் அவர். ‘ஜெயலலிதா முன்னர் எழுதிய கடிதத்தின் அடிப்படையிலேயே மத்திய அரசு அனுமதிக்கவில்லை’ எனச் சமாதானம் சொன்னார். ஜெயலலிதா புலிகளை எதிர்த்த காலத்திலும் தனது கருத்தில் மூர்க்கமாக இருந்தவர். வழவழத்த நிலைப்பாடு கொண்டவரல்ல. ஜெயலலிதா கடிதம் எழுதிய காலத்தில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தது. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர் உட்பட மூன்று தி.மு,க வினர் அப்போது மத்திய அமைச்சர்களாக இருந்தனர். ஜெயலலிதாவின் கருத்தை நிராகரிக்கும்படி இவர்கள் ஏன் அமைச்சரவையில் கூறவில்லை? தனது தவறுகளுக்கு மற்றவர்களைப் பொறுப்பாளியாக்குவதில் கருணநிதிக்கு நிகர் வேறு எவரும் இல்லை. இதில் எவருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததில்லை.


‘காந்தளகம்’ எனும் பதிப்பகத்தை நடத்தி வருபவர் மறவன்புலவு சச்சிதானந்தம் என்பவர். இவர் மீது இலங்கைக்கு மருந்து அனுப்பச் சதி செய்தார் எனக் குற்றம்சாட்டி வழக்குத் தொடர்ந்தது கருணாநிதி அரசு. போதைப்பொருளைக் கடத்தினார் அல்லது பெறுமதியான பொருட்களைக் கடத்த சதி செய்தார் என்று குற்றம் சாட்டுவது என்பது வேறு. 

ஆனால் மருந்துப் பொருட்களைக் கடத்தச் சதி செய்தார் என்பதுதான் உலகத் தமிழினத்தின் தலைவராகக் கனவு காணும் கருணாநிதியின் ஆட்சி சுமத்திய குற்றச்சாட்டு. மருந்துத் தடையால் உயிரிழக்கும் தமிழரின் உயிரைக் காப்பாற்றப் பலரும் சாத்தியமான வகையில் உதவினர். ஆனால் தனக்கு வாக்களிக்க முடியாத தமிழர் உயிரிழந்தால்தான் என்ன என்று கருதினார் கருணாநிதி.

இலங்கைத் தமிழரில் தேர்ந்தெடுக்கப்பட்டோரைத் தனியாகப் பிரித்து ‘சிறப்பு முகாம்’ என்ற கொடுஞ்சிறையொன்றை ஆரம்பித்த வரலாறும் கருணாநிதிக்கே உண்டு. புலம்பெயர் நாடுகளில் குறிப்பிட்ட காலத்தின் பின் அந்நாட்டின் பிரசைகளாகத் தமிழர்களை ஏற்றுக்கொள்ளவதுண்டு. பி.ஜே.பி அரசிலும், காங்கிரஸ் அரசாங்கத்திலும் மந்திரிப் பதவிகள் வகித்த தி.மு.கவினால் முகாம்களில் இருக்கும் தமிழருக்கு இந்தியக் குடியுரிமையோ, இரட்டைக் குடியுரிமையோ பெற்றுக் கொடுக்கக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மனமில்லாமல் போய்விட்டது.

இந்திய இராணுவத்தின் இலங்கைப் பிரசன்னத்தை எதிர்த்து வை.கோவின் அழுத்தத்தால் கண்டன நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது தி.மு.க. அக்காலகட்டத்தில் எம்.ஜி.அர் மறைந்தார். நன்றிக் கடனாகவும் எம்.ஜி.ஆருக்கு அஞ்சலி செலுத்துமுகமாகவும் பிரபாகரனும் எம்.ஜி.ஆரும் ஒன்றாக இருக்கும் படங்களைத் தமிழகமெங்கும் சுவரொட்டிகளாக ஒட்டினர் புலிகள். இதனைக் கண்ணுற்றதும் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட கண்டன நடவடிக்கைகளை ரத்துச் செய்தார் கருணாநிதி. மறைந்த ஒருவருக்குச் செய்யும் அஞ்சலி நடவடிக்கைகளில் கூட அரசியல் லாப நட்டக் கணக்குப் பார்ப்பவர் அவர். 

 அவரைப் பொறுத்தவரை தான் கூப்பிட்டால் வரும் நாய்க் குட்டிகளாகப் புலிகள் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. முதன் முதலாகப் புலிகள் முதல்வர் எம்.ஜி.ஆரைச் சந்திக்க இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், அந்தச் சந்திப்புக்கு முதல் நாள் தன்னைச் சந்திக்க வேண்டுமென்றார். எம்.ஜி.ஆருடைய சந்திப்புக்கான திகதி பல நாட்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசியல் விளையாட்டுக்குள் பகடைக்காய்களாகத் தம்மைப் பயன்படுத்துவதைப் பிரபாகரன் விரும்பவில்லை. 

ஆகவே முதல்வருடனான சந்திப்புக்கு பிறகு ஒரு நாளில் சந்திக்கலாம் எனத் தகவல் அனுப்பினார். இதனை ஜீரணிப்பது கருணாநிதிக்குச் சிரமமாக இருந்தது. புலிகள், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் ஆகிய நான்கு இயக்கங்களுக்கும் கொடுக்க விருந்த தலா இருபத்தையாயிரம் ரூபாவில் புலிகளுக்கு என ஒதுக்கிய இருபத்தையாயிரத்தை டெலோ இயக்கத்துக்கு வழங்குவதாக அறிவித்தார். இதற்கு ஒரு காரணம் இருந்தது.

1980 களில் இலங்கைத் தமிழர் நலனின் ஒட்டுமொத்தக் குத்தகைக்காரர் தான்தான் என்ற மாதிரி பிம்பத்தை உருவாக்க அவர் முயற்சித்தார். எம்.ஜி.ஆர் மலையாளி என மறைமுகமாகவும் சுட்டிக் காட்டுவார். அதனால் தான் இலங்கைத் தமிழர் நலனுக்கு போதிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றும் குற்றம் சாட்ட முயற்சித்தார். பொறுமையிழந்த எம்.ஜி.ஆர் ‘கருணாநிதி தனது ஆட்சிக்காலத்தில் குட்டிமணியை ஸ்ரீலங்கா பொலிசாரிடம் ஒப்படைத்தவர் தானே’ என்று கேட்டார். இதனால் வெல வெலத்தார் கருணாநிதி.

அக்காலகட்டத்தில் ரெலோவில் ராசப்பிள்ளை, ஸ்ரீசபாரத்தினம், ஒபரோய் தேவன் (வறுவா), சின்ன வறுவா, சுதன், சாரதி(ரமேஷ்), முரளி, ரூபன், செல்வம் (ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் தற்போதைய குழுக்களின் பிரதித்தலைவர்) உட்பட பன்னிரண்டு போராளிகளே இருந்தனர். ராசப்பிள்ளை தலைவராக இருந்தாலும் சில காரணங்களால் நடைமுறையில் ஸ்ரீசபாரத்தினத்தின் செல்வாக்கே அங்கு மேலோங்கி இருந்தது. ஆகையால் ஸ்ரீசபாரத்தினத்தைத் தொடர்பு கொண்ட தி.மு.க வினர் அவரது பெயரில் ஒரு அறிக்கையை வெளியிடச் செய்தனர். ‘தமிழீழ விடுதலை இயக்கம்’ என்ற பெயரில் உத்தியோகபூர்வமாக வெளிவந்த முதலாவது அறிக்கை அதுதான். அதில் செயலதிபர் என்று ஸ்ரீசபாரத்தினம் கையொப்பம் இட்டிருந்தார். ‘குட்டிமணியை ஸ்ரீலங்கா பொலிசாரிடம் ஒப்படைத்த போது அவர் ஒரு போராளி என்ற விடயம் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசுக்குத் தெரியாது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறு தன்னைப் பெரும் இக்கட்டிலிருந்து காப்பாற்றிய ஸ்ரீசபாரத்தினத்தின் மீது கருணாநிதிக்கு அபிமானம் இருந்தது. அதனை நிரூபிக்கும் வகையில் தான் சிறையிலிருந்த போது கதை – வசனம் எழுதிய ‘பாலைவன ரோஜாக்கள்’ என்ற திரைப்படத்தின் (சத்தியராஜ், பிரபு நடித்தது) ஒரு கதாபாத்திரத்துக்கு சபாரத்தினம் எனப் பெயர் சூட்டினார். தி.மு.க. டெலோவுக்கு சார்பாக இருந்த போதும் வை.கோ, சுப்புலட்சுமி ஜெகதீசன் போன்றோர் புலிகளுக்கு ஆதரவாக இருந்தனர். எனினும் தனது சொல் கேட்காத புலிகள் மீது கருணாநிதி கொண்டிருந்த வன்மம் மட்டும் அப்படியே இருந்தது. அதன் தொடர்ச்சியே சிறப்பு முகாம், பார்வதியம்மாளுக்கு அனுமதி மறுப்பு, இறுதிப்போரில் ஸ்ரீலங்கா அரசுக்கு மறைமுக ஆதரவு, ஏழுபேரின் விடுதலையில் தசாவதார நடிப்பு என தொடர்ந்தது. இப்போது உலகத்திலேயே ஒழுக்கம் மிக்க போராளி அமைப்பாக இருந்த புலிகளைக் கொச்சைப்படுத்திய சிவகாமி ஐ.எ.எஸ் க்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடச் சந்தர்ப்பம்.

இலங்கைப் பிரச்சினைக்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகியதாக கூறியதும் ஒரு நாடகமே. தி.மு.க உறுப்பினர்களின் மரணம் காரணமாக நடைபெறும் இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க வேட்பாளர்களே வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைமை கூடப் பறிபோகும் சூழலில்தான் இவர் ராஜினாமா செய்தார். அடுத்த எதிர்க்கட்சித் தலைவராக – கருணாநிதிக்கு மாற்றாக தி.மு.க வில் ஒருவர் உருவாகி விட்டார் என்ற நிலைமை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே அன்பழகனையும் ராஜினாமா செய்ய வைத்தார். இருவரும் ராஜினாமா செய்ததும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகிவிட்டது.

சிவகாமி ஐ.எ.எஸ் போட்டியிடும் தொகுதியில் வை.கோவோ, சீமானோ, திருமாவளவனோ போட்டியிடப் போவதில்லை. எல்லோரும் தத்தமக்குச் சாதகமான தொகுதியில்தான் போட்டியிடப் போகின்றனர். கூடா நட்பு கேடாய் முடியும் என்று குறிப்பிட்ட கருணாநிதி இன்னமும் எழுவரின் விடுதலையை எதிர்க்கும் காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறார். இது இந்திய அரசியல் எனினும் கட்சிக்குள் தமது பரம்பரை உரிமையை தக்கவைக்கத் தடையாக இருந்த வை.கோவை அகற்ற அல்லது அகலவைக்க புலிகளின் மீது பழியைப் போட்ட கருணாநிதியின் செயல் குள்ளத்தனமானது.

தி.மு.க வில் முன்னர் தீப்பொறி ஆறுமுகம் என்றொரு பேச்சாளர் இருந்தார். அவர் தனது பேச்சை ஆரம்பிக்க முன்னர் ‘எனது உரையை தொடங்க முன்னர் இங்குள்ள பெண்களை வெளியேறுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் எனது பேச்சு அப்படி இப்படி இருக்கும்’ என முன்னுரையாகக் குறிப்பிடுவார். அதற்கு ஏற்றவாறு பேச்சும் விரசமாகவும் நாகரிகமில்லாமலும் இருக்கும்.

இவ்வாறன கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தாலோ என்னவோ சிவகாமி ஐ.ஏ.எஸ். கருத்து தீப்பொறி ஆறுமுகத்தின் பாணியில் உள்ளது. ‘வாழும் வள்ளுவர்’ போல காதலி, மனைவி, அடுத்த மனைவி, துணைவி என்று ‘நல்லறத்தில்’ ஈடுபடாமல் கணிசமான புலிகள் உறுப்பினர்கள் தமது வாழ்க்கைத் துணையைத் பெண் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுத்து, ஒருவரோடு ஒருவர் மட்டும் உறவு கொண்டு வாழ்க்கை நடத்தியது இவர் எதிர்பார்க்கும் பண்பாட்டுக்கு விரோதமாக இருக்கலாம். இவரது கருத்தை கி.வீரமணி, சுபவீரபாண்டியன், போன்றோர் கூட ஆட்சேபிக்கவில்லை. எத்தனையோ ஏமாற்றங்களை சந்தித்த ஈழத் தமிழினத்துக்கு இது ஒன்றும் புதிதல்ல.

- ஞானி