Breaking News

போதைப்பொருள் அற்ற நாட்டை உருவாக்குவோம்! - ஜனாதிபதி

இலங்கைவாழ் தமிழ் இந்துக்களினதும் சிங்கள பௌத்தர்களினதும் மிக முக்கியமான தேசிய கலாசார விழாவாகவே சித்திரைப் புதுவருடம் கொண்டாடப்படுகின்றது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சித்திரை புது வருடத்தினை முன்னிட்டு தனது வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இவ் இரு இனத்தவர்களும் தத்தமது கலாசார தனித்துவங்களுக்கு முக்கியத்துவத்தை வழங்கி இப்பண்டிகையினை கொண்டாடுவதே வழமையாகும்

இப்புதுவருடத்தின் போது ஒட்டுமொத்த சமூகமும் குறிப்பிட்ட ஒரு சுப நேரத்தில் உணவு சமைத்து உண்பது என்ற விடயம் ஏனைய எந்தவொரு நாட்டவரிடமும் காணமுடியாத ஒரு சிறப்பான அம்சமாகும்.

அத்தோடு புதுவருடமானது அர்ப்பணிப்பு, பாராட்டுதல், பகைமை மறத்தல், பெரியோரை கனம் பண்ணுதல், பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொள்ளுதல் ஆகியவற்றின் ஒட்டு மொத்த வடிவமாகும்.

சித்திரைப்புதுவருடத்தில் இவ் நற்குணங்களைப் புரிந்து அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து கலாசார உரிமைகளை பேணிப் பாதுகாத்தவாறு மன மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் செயற்படுவது நம் அனைவரினதும் பொறுப்பாகும்

சூரிய பகவான் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்கு பயணிப்பதை குறித்து நிற்கின்ற அற்புதமான ஒரு பண்டிகையாகவும் சித்திரை வருடப் பிறப்பை குறிப்பிடலாம்.

புதுவருடத்துடன் புதுப்பொலிவு பெறும் இயற்கையுடன் எமது தொடர்புகளையும் புதுப்பிக்கும் ஒர் அபூர்வ சந்தர்ப்பமாகவும் இப்புதுவருடம் அமைகின்றது.

விருந்தோம்பல் மூலம் அனைவரையும் ஒன்றிணைக்கின்ற மங்களகரமான இந்நிகழ்வு தேசிய நல்லிணக்கத்திற்கு வலுவூட்டுகின்ற ஒரு முக்கிய பண்டிகையாகவும் கொள்ளலாம்.

இவ்வேளையில் அனைத்து இல்லங்களிலும் மங்கள ஒளி பிரகாசித்து அனைவரின் முகங்களும் மகிழ்ச்சியில் மலர்ந்து பகைமை உணர்வு தணிந்து தம் அயலவர்களை கருணை உள்ளத்துடனும் கனிவு மனதுடனும் பார்க்கப் பழகும் நற்குணங்களை மேலோங்கச் செய்யும் புத்தாண்டாக இச் சித்திரைப் புதுவருடம் அமைய வேண்டுமென மனமார பிரார்த்திக்கின்றேன்.

ஒரே தேசம் ஒரே மக்கள் என்ற ரீதியில் பேதங்களும் பாகுபாடுகளும் இல்லாத போதைப்பொருள் மற்றும் மதுபானப் பாவனை அற்ற ஒரு தேசத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்திற்கு உங்கள் அனைவரினதும் பூரண ஒத்துழைப்பை நல்கும் வகையில் இச் சித்திரைப் புதுவருடத்தை கொண்டாட உறுதி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.