Breaking News

சம்பூரில் திரவ எரிவாயு மின்திட்டம்? – இந்தியா, ஜப்பானுடன் பேச இலங்கை அரசு முடிவு

சம்பூரில், அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள, அனல் மின் நிலையங்களுக்குப் பதிலாக, இயற்கை திரவ எரிவாயு மின் நிலையங்களை அமைப்பது தொடர்பாக இந்தியாவுடனும், ஜப்பானுடனும்  அரசாங்கம் பேச்சு நடத்தவுள்ளது.

இலங்கையில் மேலதிக அனல் மின் நிலையங்களை அமைக்கக் கூடாது என்று சக்தி மற்றும் சூழலியல் நிபுணர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்து வரும் நிலையிலும், அனல் மின் திட்டத்துக்கு சம்பூர் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையிலுமே, இந்த மாற்றுத் திட்டம் குறித்து இலங்கை அரசாங்கம் பேச்சுக்களை நடத்தவுள்ளது.

திரவ எரிவாயு மின் திட்டம் மற்றும் ஏனைய சாத்தியமான நிலையான தீர்வுகளை நோக்கி, நகர முடியும் என்று அரசாங்கம் நம்புவதாக, சிறிலங்காவின் மின்சக்தி அமைச்சின் செயலர் சுரேன் பதேகொட தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் அனல் மின் திட்டத்தை திரவ எரிவாயு மின்திட்டமாக மாற்ற முடியும் என்றும், ஆனால், உலகளவில் திரவ எரிவாயுவின் கேள்வி அதிகரித்துள்ளதால், அதன் விலை பெருமளவில் உயரக்கூடும் என்றும், அது இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே நீண்டகால நோக்கில் 100 வீதம் மீள்சுழற்சி செய்யத்தக்க நிலையான திட்டம் ஒன்றையே பின்பற்ற வேண்டியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.