வடக்கிற்கு செல்லுவதற்கு பாஸ் நடைமுறை இல்லை : இராணுவம்
இலங்கையின் வடபகுதிக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டவர்கள் இராணுவத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற செய்தி தவறுதலாகவே வெளியிடப்பட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் இதுதொடர்பான அறிவுறுத்தல் கடந்த மார்ச் 3ஆம் திகதி பிரசுரமாகியிருந்தது.
இதற்கமைய யாழ்ப்பாணம் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் மன்னார் மாவட்டத்தின் விடத்தல்தீவு மற்றும் வவுனியாவின் ஓமந்தையின் வடபகுதிக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் மின்னஞ்சல் அல்லது தொலைநகல் மூலம், இராணுவ விசாவை பெறவேண்டும் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த குறித்த பகுதிகளுக்கு தரை மார்க்கமாக செல்லும் பகுதிகளில் காணப்படும் இராணுவ சோதனைச் சாவடிகளில் வெளிநாட்டவர்களின் குறித்த இராணுவ விசா பரிசோதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீரவிடம் கொழும்பு ஊடகம் ஒன்று வினவிய போது. இந்தச் செய்தி தவறுதலாக பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டிருந்ததாகவும், அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.