வடக்கில் தொடர் கைது: பயங்கரவாத பிரிவுடன் ஆணைக்குழு கலந்துரையாடல்?
கொழும்பில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளுடன் எதிர்வரும் தினங்களில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மனித உரிமை மீறல் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அதிகளவிலான முறைப்பாடுகளை பதிவுசெய்து வருகின்றனர்.
இதனடிப்படையில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக ஆணைக்குழு அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேசத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கியுடன் தொடர்பு வைத்திருந்ததாகத் தெரிவித்து சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட நபருடன் தொடர்புகளைப் பேணிய்ய குற்றச்சாட்டின் பேரில் இதுவரை வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உள்ளிட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு எதிராக பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ளனர்.அத்தோடு. கிளிநெச்சி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் தந்தை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் செயற்பாடுகள் தொர்பாகவும், பூசா தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்படும் தனது மகனின் நிலைமை குறித்தும் முறைப்பாடுகளை ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ளார்.
இந்த முறைப்பாடுகளை கருத்தில் எடுத்த மனித உரிமைகள் ஆணைக்குழு, இது தொடர்பாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை வெகுவிரைவில் நடத்த திர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.








