Breaking News

மேற்கத்தேய சூழ்ச்சிகளில் ஒன்று : சமஷ்டி அடிப்படையிலான தீர்வுத் திட்டம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டிருக்கும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வுத் திட்டம் மேற்கத்தேய சூழ்ச்சிகளில் ஒன்று என்று இந்துராகார தம்மரத்ன தேரர் வலியுறுத்திள்ளார்.

களனி பல்கலைக்கழகத்தின் கலாசாரத் துறை பேராசிரியர் இந்துராகார தம்மரத்ன தேரர் இது குறித்து வார இறுதி சிங்களப் பத்திரிகையொன்றுக்கு பேட்டியொன்றை வழங்கியுள்ளார்.

அதில் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையில் உள்ள கனிம வளங்களைக் கொள்ளையடிப்பது மேற்கத்தேய சக்திகளின் நீண்ட நாள் அபிலாசையாகும்.இதனைத் தடுக்கும் பாதுகாப்புக் கவசமாக ஒரு நபரிடத்தில் அதிகாரம் குவிந்திருந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை காணப்பட்டது.

அதனை நீக்கும் வகையிலும், தமக்கு விரும்பிய நபர்களை ஆட்சியில் அமர்த்தும் வகையிலும் மேற்கத்தேய நாடுகள் முன்னெடுத்த சதி நடவடிக்கைகள் கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளன.

தற்போது அவர்கள் அதற்கடுத்த கட்டமான இலங்கையின் ஆட்சி சீர்குலைந்து, நிலையற்றதும் பெரும்பான்மை அற்றதுமான தளம்பல் ஆட்சியொன்றை உருவாக்க முனைகின்றார்கள்.

அதன் மூலமாக இலங்கையின் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பது அவர்களுக்கு மிக இலகுவான விடயமாக அமைந்து விடும்.

அதனை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் புதிய அரசியல் அமைப்பின் ஊடாக அனைத்து இனங்கள் மத்தியிலும் பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சிகள் சூட்சுமமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வின் மூலமாக நாட்டை தளம்பல் நிலைக்குத்தள்ளி விட முயற்சிக்கப்படுகின்றது.தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள சமஷ்டி நிர்வாகமுறை தமிழ் மக்களின் தேவையோ, அல்லது தமிழ் மக்கள் அவ்வாறான ஒன்றைக் கோரவோ இல்லை.

இது ஐரோப்பிய, அமெரிக்க நலன்களை திருப்திப்படுத்தும், அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் ஒரு கோரிக்கையாகும்.இதன் மூலம் இலங்கையினுள் இன, மத, மொழி , பிரதேச ரீதியான பிளவுகள் தலைதூக்கும். இதனைத் தடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் தம்மரத்ன தேரர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.