Breaking News

தனித்தமிழீழம் குறித்த ஜெயலலிதாவின் கருத்து சுயநலமானது : கனிமொழி சாடல்



தேர்தல் நேரத்தில் மாத்திரம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர ஜெயலலிதா ஜெயராம் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர், கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஈழத்தமிழர்கள் மற்றும் தனித் தமிழீழம் போன்ற கருத்துகளுக்கு முற்றிலும் எதிரான நபரே ஜெயலலிதா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழர்களுக்கு உதவ வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நிராகரித்து வந்த ஜெயலலிதாவிற்கு, தேர்தல் காலங்களில் மாத்திரம் தமிழர் நலன் நினைவுக்கு வருவதாகவும் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

தனித்தமிழீழம் அமைவதற்கும், தமிழர்கள் முழுமையான சுதந்திரத்துடன் வாழ்வதற்கும் தொடர்ந்து பாடுபடப் போவதாக திருச்சியில் இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் ஜெயலலிதா கூறியிருந்தார்.

மேலும் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்க மத்தியரசை வலியுறுத்தப்போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்தை பழ.நெடுமாறன் உள்ளிட்ட தமிழகத்தின் ஒருசில அரசியல்வாதிகள் வரவேற்றுள்ள நிலையில் கனிமொழி இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.