சம்பந்தனைக் கைது செய்ய முடியுமா? – சவால் விடுக்கிறார் கம்மன்பில
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனைக் கைது செய்ய முடியுமா என்று, இலங்கையின் புதிய காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவிடம் சவால் விடுத்துள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், ‘எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் கடந்த 16ஆம் நாள், கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் உள்ள கஜபா படைப்பிரிவு இராணுவ முகாமுக்குள் அத்துமீறிப் பிரவேசித்தனர்.
இது தொடர்பாக, காவல்நிலையத்தில், இராணுவம் அன்றைய நாளே முறைப்பாடு செய்துள்ளது.புதிய காவல்துறை மா அதிபராகப் பொறுப்பேற்றதும், பூஜித ஜெயசுந்தர, தாம் நடுநிலையாகப் பணியாற்றுவேன் என்று கூறியிருந்தார்.
அவர் தனது, நடுநிலையை நிரூபிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும்.இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழைந்து, இராணுவத்தினரைப் பணி செய்ய விடாமல் குழப்பி, இராணுவ முகாமை அகற்ற வேண்டும் என்று கோரியிருக்கிறார் சம்பந்தன்.
அவருக்கு எதிராக செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.முடிந்தால் சம்பந்தனைக் கைது செய்யுமாறும், தனது வாக்குறுதியை காப்பாற்றுமாறும்,காவல்துறை மா அதிபருக்கு சவால் விடுகிறேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.