காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை இன்று கிளிநொச்சியில்..!!
காணாமற்போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் வட மாகாணத்திற்கான இறுதிக்கட்ட அமர்வுகள் இன்றுதிங்கட்கிழமை) கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறவுள்ளன.
வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலும் ஆணைக்குழு தனது சாட்சி விசாரணை அமர்வுகளை நிறைவுசெய்துள்ளது.
இதற்கமைய வடக்கிற்கான இறுதிக்கட்ட அமர்வு இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த சாட்சி விசாரணை அமர்வுகளில் சாட்சியமளிப்பதற்காக கரைச்சி, கண்டாவளை, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவுகளில் காணாமற்போனோர் தொடர்பில் முறைப்பாடுகளை செய்துள்ளவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர இதன்போது புதிய முறைப்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக காணாமற்போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.