சம்பந்தன் தரப்பினருக்கு எதிராக ஜனாதிபதி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் உள்ளிட்டோரின் சமஷ்டி கோரிக்கைக்கு எதிராக ஜனாதிபதி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அக்கட்சியின் ஊடகச் செயலாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை வலியுறுத்துகின்றது.
இது உண்மையில் அரசியல் யாப்புக்கு எதிரானதாகும்.எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமன்றி வடமாகாண சபையின் பிரதிநிதிகளும் அந்தந்தப் பதவிகளுக்கு நியமிக்கப்படும் போது நாட்டின் அரசியலமைப்பை பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துள்ளார்கள்.
இந்நிலையில் அவர்கள் அரசியலமைப்புக்கு விரோதமாக செயற்படும் போது அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும். பிரபாகரனின் போராட்டம் நியாயமானது என்று எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வலியுறுத்துகின்ற போதிலும், பிரபாகரன் உள்ளிட்ட தீவிரவாதிகள் ஒழித்துக் கட்டப்பட்டது உண்மையிலேயே நியாயமானது என்பதே ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கையாகும்.
நாட்டில் நல்லிணக்கம் என்பதை அரசாங்கத்தினால் மட்டும் ஏற்படுத்தி விட முடியாது. தீவிரவாதப் போக்குடைய தமிழ்த் தரப்பினரும் தமது கொள்கையை கைவிட்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
சமஷ்டி அடிப்படையிலான தீர்வைக் கோருவது நல்லிணக்கத்துக்கு வழியேற்படுத்தாது. அதற்குப் பதிலாக கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் நல்லிணக்கத்தையும் குலைத்துவிடும்.எனவே இது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.