Breaking News

முன்அனுமதி பெற்றே சம்பந்தன் படைமுகாமுக்குள் செல்ல வேண்டும் – இலங்கை அரசு

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் படை முகாம்களுக்குச் செல்லலாம் என்றும், ஆனால் அதற்கான முன்னறிவித்தல் வழங்கப்பட்டு அனுமதி பெற வேண்டும் என்றும், அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடந்த ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர், “இப்போது நாட்டில் போர் இல்லை, சமாதான சூழல் நிலவுகின்றது. எனவே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அல்லது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எந்தவொரு மக்கள் பிரதிநிதியும், படை முகாம்களுக்கு செல்ல முடியும். அதற்குத் தடையில்லை.

ஆனால் அவ்வாறு செல்வதற்கு முன்பதாக இராணுவத் தளபதி அல்லது தான் செல்லப் போகும் படை முகாமின் உயரதிகாரிகளிடம் விடயத்தை கூறி, அவர்களின் அனுமதியைப் பெற்றுச் செல்ல வேண்டும்.அவ்வாறு இல்லாமல் திடீரென முகாமுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சென்றமை தவறான செயற்பாடாகும்.

போர் முடிந்து 7 ஆண்டுகள் தான் கழிந்துள்ளன. தேசிய பாதுகாப்பு தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியது அரசின் பொறுப்பாகும்.வடக்கில் இராணுவத்தை உடனடியாக குறைக்குமாறும், ஆயுதங்களை கைவிடுமாறும் கோர முடியாது. ஏனென்றால் தேசிய பாதுகாப்பு அவசியமானது. எதிர்க்கட்சித் தலைவர் காவல்துறை பாதுகாப்புடனேயே படை முகாமுக்கு சென்றுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் என தெரிவிக்கப்பட்ட பின்னரே கதவு திறக்கப்பட்டது.

இவ்வாறான செயற்பாடுகள் இனவாதிகள், அடிப்படைவாதிகளுக்கு குழப்பங்களை ஏற்படுத்த சாதகமாக அமையும்.எனவே இனி எதிர்காலத்தில் படைமுகாம்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் அல்லது எந்தவொரு மக்கள் பிரதிநிதியும், படை உயரதிகாரிகளுக்கு அறிவித்து கொடுத்து அனுமதி பெற்று முன்னேற்பாடுகளுடன் செல்ல வேண்டுமென்ற அறிவுறுத்தல்களை அரசாங்கம் விடுத்துள்ளது” என்று தெரிவித்தார்.